

சூதாட்டப் புகாரில் சிக்கி தண்டனையையும் தடைகளையும் கடந்து வந்த பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீர் மீண்டும் டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2010 லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கிய ஆமீர் அதன் பிறகு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார். தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் பாகிஸ்தான் அணி நிர்வாகம் உற்சாகடமைந்துள்ளது. வஹாப் ரியாஸும், மொகமது ஆமீரும் ஒரு அபாயகரக் கூட்டணி அமைப்பார்கள் என்று பாகிஸ்தான் ரசிகர்களிடையே ஆர்வம் தலைதூக்கியுள்ளது.
டி20 அணிக்கு ஷாகித் அப்ரீடி கேப்டன், ஒருநாள் அணிக்கு அசார் அலி கேப்டன்.
மொகமது ஆமீர் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் 51 விக்கெட்டுகளையும், 15 ஒருநாள் போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும், 18 டி20 போட்டிகளில் 23 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான தொடர் ஜனவரி 15-ம் தேதி ஈடன் பார்க் மைதானத்தில் முதல் டி20 போட்டி மூலம் தொடங்குகிறது. ஜனவரி 17ல் 2-வது டி20 ஹாமில்டனிலும், ஜனவரி 22-ல் 3-வது டி20 வெலிங்டனிலும் நடைபெறுகிறது.
ஜனவரி 25-ம் தேதி முதல் ஒருநாள் போட்டி வெலிங்டனிலும், ஜனவரி 28-ல் நேப்பியரில் 2-வது ஒருநாள் போட்டியும், ஜனவரி 31-ம் தேதி ஆக்லாந்தில் 3-வது போட்டியும் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் ஒருநாள் அணி: அசார் அலி (கேப்டன்), அகமது ஷெசாத், ஹபீஸ், ஷோயப் மாலிக், ஆசாத் ஷபிக், பாபர் ஆஸம், ஷொயப் மக்ஸூத், ஸபர் கோஹர், இமாத் வாசிம், அன்வர் அலி, சர்பராஸ் அகமது, வஹாப் ரியாஸ், ரஹத் அலி, மொகமது இர்பான், மொகமது ரிஸ்வான், மொகமது ஆமீர்.
டி20 அணி: ஷாகித் அப்ரீடி (கேப்டன்), ஷெசாத், ஹபீஸ், ஷோயப் மக்ஸூத், ஷோயப் மாலிக், உமர் அக்மல், இப்திகார் அகமது, இமாத் வாசிம், அன்வர் அலி, ஆமீர் யாமின், சர்பராஸ் அகமது, வஹாப் ரியாஸ், உமர் குல், மொகமது ரிஸ்வான், சாத் நஸீம், மொகமது ஆமீர்.