

பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் “த்ரில்” வெற்றி கண்டது.
அபுதாபியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 49.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிஸ்பா உல் ஹக் 51 ரன்களும், முகமது ஹபீஸ், அன்வர் அலி ஆகியோர் தலா 41 ரன்களும் எடுத்தனர். இலங்கைத் தரப்பில் லசித் மலிங்கா 4 விக்கெட்டுகளையும், லக்மல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சிறப்பான தொடக்கம்
233 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இலங்கை அணியில் குஷல் பெரேரா, தில்ஷான் ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவர்களில் 75 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தினர். குஷல் பெரேரா 41 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து தில்ஷானுடன் இணைந்தார் சங்ககாரா. இலங்கை அணி 113 ரன்களை எட்டியபோது தில்ஷான் 45 ரன்களில் (69 பந்துகளில்) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சங்ககாரா 22 ரன்களில் வெளியேற, இலங்கை சரிவுக்குள்ளானது.
இதனால் 45.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து தடுமாறியது. 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தினேஷ் சன்டிமலும், அஜந்தா மென்டிஸும் சிறப்பாக ஆடி இலங்கையை மீட்டனர்.
இலங்கையின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட்டன. உமர் குல் வீசிய 49-வது ஓவரில் சன்டிமல், மென்டிஸ் ஆகியோர் தலா ஒரு சிக்ஸரை விளாச, அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் கிடைத்தன. அன்வர் அலி வீசிய கடைசி ஓவரின் 4-வது பந்தில் மென்டிஸ் பவுண்டரி அடிக்க, இலங்கை 8 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்து “த்ரில்” வெற்றி கண்டது. தினேஷ் சன்டிமால் 70 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரிகளுடன் 64, மென்டிஸ் 14 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சன்டிமல்-மென்டிஸ் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்தது. தினேஷ் சன்டிமல் ஆட்டநாயகனாகவும், முகமது ஹபீஸ் தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் பாகிஸ்தான் ஏற்கெனவே 3 போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில் இலங்கைக்கு இந்த வெற்றி ஆறுதல் வெற்றியாக அமைந்தது.