

ஓவல் மைதானத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் முதல் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேச அணி 50 ஒவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ரன்கள் குவித்துள்ளது.
டாஸ் வென்று ஓவல் மைதானத்தின் சமீபத்திய நடத்தைகளுக்கு ஏற்ப மோர்கன் வங்கதேசத்தை முதலில் பேட் செய்ய அழைத்தார். ஆனால் முதன்மை பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 2 ஒவர்கள் வீசிய பிறகு காயம் காரணமாக வெளியேறியது இங்கிலாந்து பந்து வீச்சில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது.
அதே போல் அடில் ரஷீத்துக்குப் பதிலாக ஜேக் பால் என்ற வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்ததும் பின்னடைவை ஏற்படுத்தியது. அவர் ஷார்ட் பிட்ச், ஓவர் பிட்ச் பந்துகளாக வீசி 10 ஓவர்களில் 82 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் வங்கதேசம் அடித்த மொத்தம் 32 பவுண்டரிகளில் 12 பவுண்டரிகள் இவர் பந்தில் விளாசப்பட்டது. அதே போல் மொத்தம் 4 சிக்சர்களில் ஒரு சிக்சர் இவரது பந்தில் அடிக்கப்பட்டது.
அதே போல் லியாம் பிளெங்கெட்டும் கடும் தவறுகளைச் செய்தார் ஆனால் கடைசியில் வங்கதேச ஸ்கோர் 325-330 ரன்களை எட்டாதவாறு தடுத்து 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தமிம் இக்பால் சதமும், முஷ்பிகுர் ரஹிம் பேட்டிங்கும் அபாரமாக அமைந்தது, இருவரும் ஷாட் தேர்வுகளை சமயோசிதமாகவும் ஷாட் அடிக்க வேண்டிய இடத்தையும் அபாரமாகத் தேர்வு செய்தனர், இதனைக் கூறும்போது, இங்கிலாந்து நிறுத்தி வைக்கப்பட்ட பீல்டுக்கு பந்து வீசவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும், மைதானத்தின் குறைந்த தூர எல்லைக் கோட்டிற்கு அடிக்குமாறு வீசியது பால், உட், பிளங்கெட், மொயின் அலி ஆகியோரது தவறாகும்.
இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேசம் முதலில் பேட் செய்த தருணங்களில் 280+ ஸ்கோர்களை எட்டியதில்லை. ஆசியாவுக்கு வெளியே இருமுறைதான் 280 ரன்களுக்கும் அதிகமான இலக்கை வங்கதேசம் நிர்ணயித்துள்ளது. ஆனால் இன்று தமீம் இக்பால் சதத்துடன் 305 ரன்களை எட்டியுள்ளது.
தொடக்கத்தில் சவுமியா சர்க்காருக்கு பால் பந்தில் ஸ்கொயர் லெக்கில் எளிதான கேட்சை மொயின் அலி கோட்டை விட்டார். பால் பந்தை முதலில் பதம் பார்த்தவர் சவுமியா சர்க்காரே. 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அவர் 28 ரன்கள் எடுத்து பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் வீழ்ந்தார்.
இம்ருல் கயேஸ் இறங்கியவுடன் அவருக்கு எட்ஜ் எடுத்தது, ஆனால் ஸ்லிப்பில் ஒருவரும் இல்லை, ஸ்லிப் இருந்திருந்தால் அது கேட்ச் ஆகியிருக்கும். ஆனால் அவரும் அதிக நேரம் நீடிக்கவில்லை. 20 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அவர் பிளங்கெட் பந்தை ஒரு அடி அடிக்க மிட் ஆனில் இடது புறம் டைவ் அடித்து மார்க் உட் அற்புதமான கேட்சை பிடித்து அவரை வெளியேற்றினார். வங்கதேசம் 19.2 ஓவர்களில் 95/2 என்று ஆனது.
தமிம் சதம், முஷ்பிகுர் அபாரம்: 166 ரன்கள் திருப்பு முனைக் கூட்டணி
95/2 என்ற நிலையிலிருந்து முஷ்பிகுர் ரஹிம், தமிம் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 166 ரன்களைச் சேர்த்தனர். 71 பந்துகளில் 50 ரன்களை எட்டிய தமிம் இக்பால் 124 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் சதம் கண்டார். இது இவரது 9-வது சதம். கடந்த 2 ஆண்டுகளில் 5-வது சதம்.
முஷ்பிகுர் ரஹிம் பிளங்கெட் பந்தில் அருமையான கவர் டிரைவ்வுடன் தொடங்கினார். பிறகு மிட்விக்கெட்டில் ஒரு புல் பவுண்டரி. இதற்கிடையே தமிம் மொயின் அலியை லாங் ஆஃபில் ஒரு தூக்கு தூக்கினார். பிளங்கெட் பந்தை ஸ்கொயர் லெக் மற்றும் மிட் ஆஃபில் பதம் பார்த்தார்.
48 பந்துகளில் முஷ்பிகுர் அரைசதம் கண்டார், இருவரும் சேர்ந்து 30-40 ஒவர்களிடையே 64 ரன்களைச் சேர்த்தனர். இதற்கு முந்தைய 10 ஓவர்களிலும் 62 ரன்கள் வந்தது. தமிம் கடைசி 10 ஓவர்களை மொயின், உட் பந்துகளை சிக்சருக்கு தூக்கி தொடங்கி வைத்தார். 166 ரன்களை இருவரும் சேர்த்தது வங்கதேச அணி அயல்நாட்டில் சேர்த்த அதிகபட்ச கூட்டணி ரன்களாகும். 45-வது ஓவரில் தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் இருவரும் பிளங்கெட் பந்தில் வெளியேறினர்.
அதன் பிறகு வங்கதேச அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை எடுத்தது.