

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் சூப்பர் சீரிஸ் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்ற இந்தியாவின் சாய்னா நேவால், கொரியாவின் யோன் ஜு பெவுக்கு எதிராக நடந்த மூன்றாவது போட்டியை போராடி வென்றார்.
கோலாலம்பூர் அரங்கில் ஒரு மணி நேரம் நடந்த இந்த போட்டியை 21-11, 17-21, 21-13 என்கிற கணக்கில் சாய்னா வென்றார்.
பி பிரிவில் போட்டியிட்டுள்ள உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான சாய்னா, முதல் போட்டியில் ஜப்பானின் மிட்டானியிடமும், இரண்டவது சுற்றில் சீனாவின் லி சுரீயிடமும் தோல்வியடைந்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்கிற சூழல் உருவானது. இன்று சாய்னா வெற்றி பெற்றிருந்தாலும், அவரால் அடுத்த சுற்றிற்கு முன்னேற முடியாது.
இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் சூரி, மிட்டானியை நேர் செட்களில் தோற்கடித்தாலும், இரண்டாவது இடத்திற்கு சாய்னா, ஜு பே மற்றும் மிட்டானி இடையே டை நிலை உருவாகும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் யார் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளனர் என்பதே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதனால் இரண்டு தோல்விகளை பெற்றுள்ள சாய்னா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாது.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா, போட்டியிலிருந்து வெளியேறுவது, அனைத்து இந்திய பேட்மின்டன் ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.