

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் தானும் ஒருவராக இருப்பதற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன் என இந்திய பேட்ஸ்மேன் சேதேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்ட புஜாரா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெறும் தனது கனவை நனவாக்குவதற்கு தீவிரம்காட்டி வருகிறார். அது தொடர்பாக அவர் கூறியதாவது:
நான் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்புகிறேன். அதிலும் குறிப்பாக 2015 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும். அதில் விளையாடும் இந்திய அணியில் நிச்சயம் இடம்பெறுவேன் என நம்புகிறேன். இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவருக்குமே இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும்.
நான் 2011-ல் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்தியா உலகக் கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணியை நினைத்து மிகவும் பெருமையடைந்தேன் என்றார். அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள புஜாரா, “ஒருநாள் அணியில் இடம்பெறுவதற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நாம் நாட்டுக்காக விளையாடும்போது நமக்குள் எழுகின்ற உணர்வு வித்தியாசமானது” என்றார்.
நியூஸிலாந்து தொடர் குறித்துப் பேசிய புஜாரா, “தென் ஆப்பிரிக்கத் தொடருடன் ஒப்பிடும்போது நியூஸிலாந்துடன் விளையாடுகையில் சவால்கள் சற்று குறைவுதான். தென் ஆப்பிரிக்காவுடன் விளையாடிய அனுபவம் எனது மனோபாவத்தை மாற்றியிருக்கிறது. இப்போது நான் வித்தியாசமான கிரிக்கெட் வீரராக மாறியிருக்கிறேன். வெளிநாட்டு ஆடுகளங்களில் ஸ்டெயின், மோர்கல், பிலாண்டர் போன்ற பௌலர்களை எதிர்கொண்டு ஒருமுறை ரன் குவித்துவிட்டாலே அது பெரிய விஷயமாகும்” என்றார்.