

முன்னாள் நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் விவகாரத்தில் பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாக்குர், செயலாளர் அஜெய் ஷிர்கே ஆகியோரை சமீபத்தில் பதவி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு, பிசிசிஐ-யின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை மூத்த வழக்கறிஞர்களான அனில் திவான், கோபால் சுப்பிரமணியம் ஆகியோரிடம் வழங்கியிருந்தது. இதன்படி இவர்கள் 9 பேர் அடங்கிய பட்டியலை சீல்வைக்கப்பட்ட உறையில் கடந்த 20-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ ஆகிய இரண்டிலும் ஒட்டுமொத்தமாக சேர்த்து 9 வருடங்கள் பதவியில் இருப்பவர்களுக்கு தடை விதிக்கும் முடிவிலும் மாற்றம் செய்தது உச்ச நீதிமன்றம். இதன் மூலம் இரு அமைப்பிலும் பதவி வகிப்பவர்களின் பதவிக்காலம் ஒட்டுமொத்தமாக 9 வருடங்களாக கணக்கிடப்படாது என தெளிவு படுத்தப்பட்டது.
மேலும் லோதா குழுவின் பரிந்துரைகளால் ரயில்வேஸ், சர்வீஸ் மற்றும் பல்கலைக்கழக கூட்டமைப்புகளின் முழு உறுப்பினர்கள் அந்தஸ்து இணை உறுப்பினர்களாக தரம் குறைக்கப்படும் சூழ்நிலை உள்ளதாக, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி வாதிட்டார்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்குஉச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிசிசிஐ நிர்வாகிகளுக்கு சிலரது பெயரை தாங்களும் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்க அனுமதி கோரி பிசிசிஐ சார்ப்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நிர்வாகிகளை பரிந்துரைக்க பிசிசிஐ-க்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு குழு சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் 70 வயதை கடந்தவர்கள் இருந்ததால் அவற்றை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
சிறப்பு குழுவும், பிசிசிஐ-யும் புதிய நிர்வாகிகளின் பரிந்துரை பட்டியலை சீல் வைக்கப்பட்ட உறையில் தனித்தனியாக அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசும், பிசிசிஐ-க்கான நிர்வாகிகளை பரிந்துரை செய்யும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.