தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்

தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்
Updated on
1 min read

பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் 15-வது ஒலிம்பிக் போட்டி 1952 ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 3 வரை நடைபெற்றது. 69 நாடுகளைச் சேர்ந்த 4,436 வீரர்கள், 519 வீராங்கனைகள் என மொத்தம் 4,955 பேர் பங்கேற்றனர். 17 விளையாட்டுகளில் 149 போட்டிகள் நடத்தப்பட்டன.

அமெரிக்கா 40 தங்கம், 19 வெள்ளி, 17 வெண்கலம் என மொத் தம் 76 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. சோவியத் யூனியன் 22 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் என 71 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. 90 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஹங்கேரி 42 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்தது.

இந்தியாவுக்கு இரு பதக்கம்

இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என இரு பதக்கங்கள் கிடைத்தன. ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 5-வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தது. இறுதி போட்டியில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

மல்யுத்தத்தில் இந்தியாவின் கே.டி.ஜாதவ், பாந்தம் வெயிட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை கே.டி.ஜாதவுக்கு கிடைத்தது. இவர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

தங்க மகள்

அமெரிக்க தடகள வீரர் பாப் மத்தியாஸ் டெகத்லான் போட்டியில் 7,887 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது முறையாக தங்கம் வென்றார். மகளிர் பிரிவு குதிரையேற்றப் போட்டியில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமை டென்மார்க்கின் லிஸ் ஹார்டெலுக்கு கிடைத்தது.

எமில் ஸடோபெக்

செக்கோஸ்லோவேக்கியாவின் எமில் ஸடோபெக், ஆடவர் பிரிவி 5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஓட்டம் மற்றும் மாரத்தானில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒரே ஒலிம்பிக்கில் நீண்ட தூர ஓட்டங்களில் அனைத்து போட்டியிலும் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். எமிலின் மனைவி டானா ஸடோப்கோவாவும் ஹெல்சிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். அவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in