

ஷாங்காயில் நேற்று நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஷாங்காய் மாஸ்டர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், உலக தரவரிசையில் 3-வது இடத்திலுள்ள ரோஜர் பெடரர், தரவரிசையில் 29-வது இடத்திலுள்ள பிரான்ஸின் கில்ஸ் சைமனைச் சந்தித்தார்.
முதல் செட் டை பிரேக்கர் வரை சென்றது. அதனை 7-6 என்ன புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய பெடரர், இரண்டாவது செட்டையும் 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி, சைமனை நேர் செட்களில் வீழ்த்தி கோப்பை யை வென்றார்.
17 கிராண்ட்ஸ்லாம்களை வென்றுள்ள ரோஜர் பெடரர் நடப்பாண்டில் வெல்லும் நான்காவது கோப்பை இதுவாகும். மேலும், பெடரர் வெல்லும் 23-வது மாஸ்டர்ஸ் கோப்பை மற்றும் சீனாவில் வெல்லும் முதல் மாஸ்டர்ஸ் கோப்பையாகும்.
சைமன் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இதுவே முதல்முறை.
இவ்வெற்றியின் மூலம், பெடரர் திங்கள்கிழமை வெளியிடப் படவுள்ள உலகத் தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத் திலுள்ள ரபேல் நடாலைப் பின்னுக்குத் தள்ளி, 2-வது இடத்தைப் பிடிப்பார்.