Published : 24 Oct 2014 10:25 AM
Last Updated : 24 Oct 2014 10:25 AM

துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்து: மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலி - வேலூர் அருகே பரிதாபம்

வேலூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது மினி லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். காயமடைந்த 35 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வரதலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரது இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ள குடியாத்தம் அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட அவரது உறவினர்கள், மினி லாரி ஒன்றில் புறப்பட்டனர்.

இந்த லாரி, அணைக்கட்டு அருகே உள்ள ஓங்கப்பாடி என்ற கிராமம் அருகே வேகமாக சென்றது. அப்போது, முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை மினி லாரி ஓட்டுநர் வெங்கடேசன் (25) முந்திச்செல்ல முயன்றுள்ளார். இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேனுக்கு அடியில் சிக்கியவர்கள், காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகிலிருந்த கிராம மக்கள் ஓடிவந்து மினி லாரியைத் தூக்கி நிறுத்தினர். ஒருவர் மீது ஒருவர் விழுந்து உடல் நசுங்கியதில் சக்கரவர்த்தி (50), ராஜம்மா (80), குப்பன் (65), சம்பூர்ணம் (60), சாமிக்கண்ணு (60) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். உயிருக்குப் போராடிய ருக்மணி (45), அனுமுத்து (50) ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் இறந்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், வேப்பங்குப்பம் மற்றும் வேலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 35 பேர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உதவியுடன் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சேர்க்கப் பட்டவர்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலையரசு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். விபத்துக்குள்ளான மினி லாரி ஓட்டுநர் வெங்கடேசன் தலைமறைவாகிவிட்டார்.

விபத்து தொடர்பாக வேப்பங்குப்பம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆட்சியர் எச்சரிக்கை

சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்சென்று விபத்துகள், உயிர்ச்சேதங்கள் ஏற்படுத்தினால் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதோடு, வாகனத்தின் அனுமதியும் ரத்து செய்யப்படும். வாகன உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு இலகுரக சரக்கு வாகனங்களுக்கும் பொருந்தும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x