Last Updated : 17 Jun, 2017 02:40 PM

 

Published : 17 Jun 2017 02:40 PM
Last Updated : 17 Jun 2017 02:40 PM

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி: தோல்விக்குப் பழிதீர்க்க பொன்னான வாய்ப்பு - இம்ரான் கான் கருத்து

இந்தியாவிடம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் போட்டியில் அடைந்த மோசமான தோல்விக்கு பழிதீர்க்க இறுதிப் போட்டி சரியான வாய்ப்பு என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் சிறந்த கேப்டன் என்று வர்ணிக்கப்படும் இம்ரான் கான், அந்த அணி உலகக் கோப்பையை வெல்லவும் காரணமாக இருந்தார். ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இறுதி போட்டி குறித்து பாக். தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேசியுள்ளார்.

அதில், "முதல் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த மோசமான தோல்விக்கு பழிதீர்க்க பாகிஸ்தான் அணிக்கு சிறந்த வாய்ப்பு இது. இந்தியாவிடன் சிறந்த பேட்டிங் உள்ளது. அவர்கள் முதலில் ஆடி பெரிய ஸ்கோர் அடித்தால் அது பாக். அணிக்கு அழுத்தம் தரும். அதனால் டாஸ் வென்றால் பாக். அணி பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும்.

மற்ற அணிகளுக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது சர்ஃபராஸுக்கு கை கொடுத்திருக்கலாம். ஆனால் இந்தியாவிட வலிமையான பேட்டிங் இருப்பதால் அவர்கள் அதிகமாக ஸ்கோர் அடித்து நமது பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் என ஒரு தரப்புக்கும் இரண்டு மடங்கு அழுத்தம் தருவார்கள்.

பாக். அணியின் உண்மையான பலம் அதன் பந்துவீச்சு தான். எனவே நாம் முதலில் ஆடி பிறகு கட்டுப்படுத்துவதே சிறந்த திட்டமாக இருக்கும். சர்ஃபராஸ் என்ன ஆச்சரியப்படுத்தியுள்ளார், தைரியமான கேப்டனாக இருக்கிறார்" என்றார் இம்ரான் கான்.

அதே நிகழ்ச்சியில் மற்றொரு பாக் முன்னாள் வீரர் ஜாவேத் மியாண்டாட் பேசுகையில், "உண்மையாகப் பேச வேண்டுமென்றால் இந்தியா வெல்லவே வாய்ப்புகள் அதிகம். சிறந்த அணி அவர்களுடையது. ஆனால் இது போன்ற பெரிய ஆட்டங்களில் சிறிய தருணங்களில் நடப்பது முக்கியம் என நான் எப்போதும் நம்புவேன். எனவே இரு அணிகளும் வெல்ல 50-50 வாய்ப்புகள் இருக்கின்றன" என்றார்.

மேலும் அரசியல் காரணங்களை ஒதுக்கிவிட்டு இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் கிரிக்கெட் தொடர் விளையாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மற்றொரு முன்னாள் கேப்டன் ஆமிர் சோஹைல் கூறுகையில், "நீண்ட நாட்கள் கழித்து இந்தியாவிடம் 3-4 நல்ல பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர், நல்ல சுழற்பந்து வீச்சும், மிக வலிமையான பேட்டிங்கும் இருக்கிறது. சாமர்த்தியமான விக்கெட் கீப்பரும் இருக்கிறார். பாகிஸ்தான் அணியின் ஒவ்வொரு வீரரை விடவும் சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் தொடர் வெற்றியால் இந்தியா மெத்தனமடையலாம். அது பாக் அணிக்கு சாதகமாக இருக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x