

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 441 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
143 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, 298 ரன்கள் முன்னிலையுடன் 3-ஆம் நாள் ஆட்டத்தைத் துவங்கிய ஆஸி. ஸ்மித் மற்றும் மார்ஷ் பங்களிப்பில் சீராக ரன் சேர்த்து வந்தது. மார்ஷ் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் ஸ்மித், இந்தியாவின் சுழற்பந்து வீச்சை திறம்படக் கையாண்டு ரன் குவித்து வந்தார்.
மார்ஷைத் தொடர்ந்து வந்த மாத்யூ வேட் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க மறுமுனையில் அசாராமல் பேட்டிங் செய்து வந்த ஸ்மித் சதத்தை எட்டினார் (187 பந்துகள்). இந்திய மண்ணில் அவர் எடுத்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த சில ஓவர்களில் ஸ்மித் (109 ரன்கள், 202 பந்துகள், 11 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். மிட்சல் ஸ்டார்க் சற்று அதிரடியாக ரன் சேர்க்க ஆரம்பித்தார். 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் வீழ்ந்தார். லயான் 13 ரன்கள், ஓ கீஃப் 6 ரன்கள் என பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை 285 ரன்களுக்கு முடித்தது. முன்னிலை 440 ரன்கள்.
441 ரன்கள் என்ற இமாலய இலக்குடன், இந்திய அணி உணவு இடைவேளைக்குப் பிறகு களமிறங்குகிறது. இன்னும் 2.5 நாட்கள் மீதமிருக்கும் நிலையில் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இல்லை என்பதே நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.