

அடுத்த உலகக் கோப்பைக்கு ஒரு வருடமே இருக்கும் நிலையில், அணிக்கு புதிதாக ஒரு கேப்டனை நியமிப்பபது, அந்த கேப்டனுக்கு பெரிய சுமையாக அமையும் என்று இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
"உலகக் கோப்பைக்கு முன் 70-80 போட்டிகளிலாவது ஆடியிருந்தால்தான் புதிய கேப்டனால் சிறப்பாக செயல்பட முடியும். இல்லையென்றால் உலகக் கோப்பையில் விளையாடுவது அர்த்தமற்றது. என்னால் இந்த நிர்பந்தத்தை புரிந்து கொள்ளமுடிகிறது. போட்டியில் ஆடும் அதே வேளையில், தேவையான அனுபவமும் அன்றே கிடைக்கும் என்பது நிச்சயமில்லாத ஒன்று. எனவே பல போட்டிகளை கடந்துதான் வர வேண்டும்" என தோனி கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி, தான் முன்னைவிட ஆரோக்கியமாகவும், உடல் தகுதியோடும் இருப்பதாகத் தெரிவித்தார்.
"நாங்கள் சமீப காலங்களில் எண்ணற்ற போட்டிகளில் விளையாடி வருகிறோம். ஆனால் நான் ஆரோக்கியமாகவே உள்ளேன். இது பெரிய அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். என் உடல் வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் இப்போதைக்கு, விளையாட முழுத் தகுதியோடு இருக்கிறது" என்று கூறினார்.