அணி மீது அதிக அழுத்தத்தை சுமத்துகிறோம்: தோல்விக்குப் பிறகு விராட் கோலி

அணி மீது அதிக அழுத்தத்தை சுமத்துகிறோம்: தோல்விக்குப் பிறகு விராட் கோலி
Updated on
2 min read

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குஜராத் லயன்ஸ் அணியிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

முதலில் பேட் செய்த பெங்களூரு அணி டை வீசிய அபாரமான ஸ்பெல்லில் (4-0-12-3) 134 ரன்களுக்குச் சுருண்டது. பேசில் தம்பி 1 விக்கெட்டையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கேப்டன் விராட் கோலி ஒரு அபார சிக்சருடன் 10 ரன்கள் எடுத்து ரெய்னாவின் மிகச்சரியான களவியூகத்திற்கு பலியானார். பேசில் தம்பி வீசிய பந்தை ஷார்ட் பைன் லெக் திசையில் கோலி அடிக்க அது அங்கு ஏரோன் பிஞ்ச் கையில் தஞ்சமடைந்தது.

கெய்லுக்கு பவுன்சர் வீசி அவரை தடுமாறச் செய்வது இக்காலத்திய ‘டிரெண்ட்’ அதன் படியே நேற்றும் கெய்ல் 11 பந்துகள் தடுமாறி 8 ரன்கள் எடுத்து டை வீசிய அருமையான அவுட் ஸ்விங்கரை எட்ஜ் செய்து தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த பந்தே டிராவிஸ் ஹெட் மீண்டும். ரெய்னாவி அருமையான களவியூகத்திற்கு ஸ்லிப் திசையில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஏ.பி.டிவில்லியர்ஸ் ஒரு ரன் எடுக்க சற்றே யோசித்தார் ஜடேஜா நேராக பேட்டிங் முனையில் ஸ்டம்பைப் பெயர்த்தார்.

கேதார் ஜாதவ் 18 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் அருமையாகவே ஆடிவந்தார், ஆனால் அவருக்கு கொஞ்சம் அதீத நம்பிக்கை ஏற்பட ஜடேஜாவின் பந்தை ஒதுங்கிக் கொண்டு லேட் கட் ஆட முயன்றார், அது ஃபுல் லெந்த் பந்து மிடில் ஸ்டம்புக்கு வந்தது, மிகவும் தெனாவட்டான ஒரு ஷாட்டை முயன்று பவுல்டு ஆனார் ஜாதவ். பவன் நெகி 19 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து அறிமுக வீச்சாளர் சோனியிடம் அவுட் ஆகி வெளியேறினார். ஆர்சிபி 134 ரன்களை மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து ஆடிய குஜராத் அணியில் தொடக்க வீரர் ஈஷான் கிஷன் 16 ரன்களில் 4 பவுண்டரி விளாசியும் மெக்கல்லம் 3 ரன்களில் சோபிக்காமலும் பத்ரீயிடம் அவுட் ஆகி வெளியேறினர். ஆனால் ஏரோன் பிஞ்ச், வெற்றி, நிகர ரன் விகிதம் இரண்டையும் மனதில் கொண்டு 22 பந்துகளில் அரைசதம் கடந்து மொத்தத்தில் 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுக்க, ரெய்னா 34 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ குஜராத் அணி 37 பந்துகள் மீதமிருக்கையில் 135/3 என்று வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக குஜராத் பவுலர் டை தேர்வு செய்யப்பட்டார்.

இந்தத் தோல்வியினால் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது ஏறக்குறைய சாத்தியமில்லை என்றே தெரிகிறது, ஆனாலும் இனிவரும் போட்டிகளில் வென்று பிற அணிகளின் வெற்றி தோல்விகளை நம்பியிருக்க வேண்டியதுதான்.

இந்நிலையில் விராட் கோலி கூறிய போது, “போட்டிகளில் தோல்வியடைவது என்பது சீரணிக்க முடியாமல் உள்ளது. எங்கள் ஆட்டத்திறமையை மேலும் வளர்க்க வேண்டும்,

தீவிர மனோபாவத்துடன் வந்து ஆடவேண்டும். நாங்கள் பேட்டிங்கில் அதனைச் செய்ய முயற்சி செய்கிறோம். அணி மீது அதிக அழுத்தத்தை சுமத்துகிறோம். தனிப்பட்ட முறையில் வீரர்கள் பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும்.

நேற்று பந்துகள் அருமையாக மட்டைக்கு வாகாகவே வந்தது. விளக்கொளியில் இரு இன்னிங்ஸ்களிலும் பந்துகள் ஒரே விதமாகவே வந்தன. ஏரோன் பிஞ்சுக்கு வாழ்த்துக்கள் அவர் மிக அருமையாக ஆடினார். குறைந்த இலக்குகளை துரத்தும் போது யாராவது ஒருவர் உத்வேகத்துடன் ஆக்ரோஷம் காட்ட வேண்டும் அதனை செய்தார் ஏரோன் பிஞ்ச்” என்றார் கோலி.

ரெய்னா கூறும்போது, “அனைத்து துறைகளிலும் நன்றாக செயல்பட்டோம். டை, பாக்னர், ஜடேஜா அபாரமாக வீசினர். பிஞ்ச் அருமையாக ஆடினார். புதிய பந்தில் பந்துகள் எழும்பி சற்றே ஸ்விங் ஆகின. டை அடுத்தடுத்த பந்துகளில் கெய்ல், ஹெட்டை வீழ்த்தினார். இதுவே திருப்பு முனையாக அமைந்தது. பேசில் தம்பி, நாது சிங் ஆகியோரும் துல்லியமாக வீசினர். பிஞ்ச் கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கினார், நான் ஒன்று அல்லது 2 ரன்களை நோக்கியே ஆடினேன். வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in