

மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 328 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.
இந்தூரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 83.5 ஓவர் களில் 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பிரித்வி ஷா 71 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து பேட் செய்த குஜராத் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 92 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. பார்கவ் 45, பார்த்தீவ் படேல் 90, ஜூனிஜா 77, ரஜூல் பாத் 25 ரன்கள் சேர்த்தனர்.
காந்தி 17, ரஷ் கலரியா 16 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். காந்தி மேற்கொண்டு ரன்கள் எடுக்காத நிலையிலும் கலரியா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஆர்.பி.சிங் 8, ஹர்திக் படேல் 1 ரன்களில் நடையை கட்ட குஜராத் அணி 104.3 ஓவர்களில் 328 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
மும்பை அணி தரப்பில் ஷர்துல் தாக்குர் 4, சாந்து, அபிஷேக் நாயர் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர். 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 67 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.
ஹர்வாத்கர் 15, பிரித்வி ஷா 44, ஸ்ரேயாஷ் ஐயர் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். சூர்ய குமார் யாதவ் 45, ஆதித்யா தாரே 13 ரன்களுடன் களத்தில் உள்ளனர். குஜராத் அணி தரப்பில் சின்தன் கஜா 3 விக்கெட்கள் கைப்பற்றினார். 108 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள மும்பை அணி கைவசம் 7 விக்கெட்கள் இருக்க இன்று 4-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது.