இந்தியாவுக்கு எதிராக ஆஃப்-கட்டர் பந்துகள் கைகொடுக்கும்: வ.தேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் நம்பிக்கை

இந்தியாவுக்கு எதிராக ஆஃப்-கட்டர் பந்துகள் கைகொடுக்கும்: வ.தேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் நம்பிக்கை
Updated on
1 min read

கட்டர்களுக்கு பெயர் பெற்ற இளம் வங்கதேச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தனது ஆஃப் கட்டர்கள் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதியில் கைகொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வங்கதேசச் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதாவது தனது கட்டர் பந்துகள் இதுவரை இங்கிலாந்து பிட்ச், சூழ்நிலையில் கைகொடுக்கவில்லை, ஆனால் அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிராக கைகொடுக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாக வந்துள்ள அந்தச் செய்தியில், இந்திய அணியை ஆஃப் கட்டர்களின் மூலம் தான் தடுமாறச் செய்து வீழ்த்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் தொடரில் முஸ்தபிசுர் ரஹ்மான் தனது ஆஃப் கட்டர்கள் மூலம் தொடர்ச்சியாக இந்திய அணிக்கு எதிராக 2 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய பேட்டிங் வரிசையை குலைத்ததைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியபோது ரஹ்மான் இந்தப் பதிலை அளித்துள்ளார்.

வங்கதேச அணி நியூஸிலாந்து அணியை நம்ப முடியாத நிலையிலிருந்து வென்றதையடுத்து (ஷாகிப், மஹமுதுல்லா சதங்கள்) மிகவும் நிதானமாக பொழுதைக் கழித்து வருகின்றனர், இன்று பயிற்சிக்கு விருப்பப் பட்டால் வரலாம் என்ற நிலையில் பல வீரர்கள் ஷாப்பிங் சென்றுள்ளனர். முஸ்தபிசுர் உடல்பயிற்சியில் ஈடுபட்டதாக அந்தச் செய்தி கூறுகிறது.

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியைக் காண வங்கதேச ரசிகர்கள் இப்போதிலிருந்தே திட்டமிட்டு வருவதாகவும், டாக்கா விழாக்கோலம் பூணும் என்றும் அந்தச் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இந்தியா-வங்கதேச அரையிறுதி வியாழனன்று நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in