வார்னர் சதமடித்தும் ஆஸி. 303-க்கு ஆல்அவுட்: முதல் இன்னிங்ஸில் பாக். 151 ரன்கள் முன்னிலை

வார்னர் சதமடித்தும் ஆஸி. 303-க்கு ஆல்அவுட்: முதல் இன்னிங்ஸில் பாக். 151 ரன்கள் முன்னிலை
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 103.1 ஓவர்களில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 133 ரன்கள் குவித்தபோதும் அந்த அணியால் வலுவான ஸ்கோரை எட்ட முடியவில்லை. இதனால் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 151 ரன்கள் முன்னிலை பெற்றது.

துபாயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 145 ஓவர்களில் 454 ரன்கள் குவித்தது. அந்த அணியில் யூனிஸ்கான் 106 ரன்களும், சர்ஃப்ராஸ் அஹமது 109 ரன்களும் குவித்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 31 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 75, கிறிஸ் ரோஜர்ஸ் 31 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

வார்னர் 9-வது சதம்

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கிறிஸ் ரோஜர்ஸ் 38 ரன்களில் ஆட்டமிழக்க, அலெக்ஸ் டூலன் களம்புகுந்தார். இதனிடையே வார்னர் 128 பந்துகளில் சதம் கண்டார். இது அவருடைய 9-வது டெஸ்ட் சதமாகும். இதுதவிர தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸ்களில் சதமடித்துள்ளார் வார்னர்.

இதன்பிறகு ஆஸ்திரேலியா சரிவுக்குள்ளானது. அலெக்ஸ் டூலன் 5, பின்னர் வந்த கேப்டன் கிளார்க் 2, ஸ்டீவன் ஸ்மித் 22 ரன்களில் ஆட்டமிழக்க, வார்னர் 133 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர் வந்தவர்களில் பிராட் ஹேடின் 22, மிட்செல் மார்ஷ் 27, மிட்செல் ஜான்சன் 37 என வேகமாக வெளியேற, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் 103.1 ஓவர்களில் 303 ரன்களோடு முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும், ரஹத் அலி, ஜல்பிகர் பாபர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in