Last Updated : 20 Aug, 2016 09:46 AM

 

Published : 20 Aug 2016 09:46 AM
Last Updated : 20 Aug 2016 09:46 AM

சதியால் சரிந்த நர்சிங்கின் பதக்கக் கனவு

மல்யுத்தப் போட்டியின் முக்கிய அம்சமே எதிராளியின் காலை வாரிவிட்டு மல்லாக்கத் தள்ளி புள்ளிகளைக் குவிப்பதுதான். நர்சிங் யாதவைப் பொருத்தவரை, விதியும் சதியும் சேர்ந்து தனக்கு எதிராக மல்யுத்தம் செய்துவிட்டதாக அவர் கதறிக்கொண்டிருக்கிறார்.

ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 74 கிலோகிராம் எடைப்பிரிவில் கலந்துகொள்வதற்கு சில மணித்துளிகளே இருந்த நிலையில் ஊக்கமருந்து விவகாரம் தொடர்பாக இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவுக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஒலிம்பிக் போட்டியில் களம் காணாமலேயே கண்ணீருடன் வெளியேறியுள்ளார் நர்சிங் யாதவ். அந்தக் கண்ணீருக்கு பின்னால் பல ஆண்டு உழைப்பு இருக்கிறது.

நர்சிங் யாதவின் தந்தை பஞ்சம் யாதவ், ஒரு பால் வியாபாரி. உத்தரப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் வசித்துவந்த அவருக்கு சிறு வயதிலேயே மல்யுத்த வீரராக வேண்டும் என்று ஆசை. ஆனால் அவரது கிராமத்தில் அதற்கு வசதிகள் இல்லை. தன்னால் செய்ய முடியாததை தன் குழந்தைகள் செய்யவேண்டும் என்ற ஆசையில் அவர்களுடன் மகாராஷ்டிர மாநிலத்துக்கு குடிபெயர்ந்தார் பஞ்சம் யாதவ்.

தனது மூத்த மகன் வினோத் யாதவை மல்யுத்த வீரனாக்குவது அவரது பெரிய கனவாக இருந்தது. இதற்காக அங்குள்ள ஒரு பயிற்சி மையத்தில் வினோத் யாதவுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினார். இதுபற்றிக் கூறும் பஞ்சம் யாதவ், “நாங்கள் பயிற்சிக்கு செல்லும்போது 3 வயதாக இருந்த நர்சிங் யாதவை பயிற்சியைப் பார்க்க அழைத்துச் செல்வோம். நாளாக ஆக தனது அண்ணனை விட நர்சிங் யாதவுக்கு மல்யுத்த பயிற்சியின் மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டது. தினமும் பள்ளி விட்டதும் நேராக பயிற்சி மையத்துக்கு வந்துவிடுவான். அங்கு அவனும் விளையாட்டாக பயிற்சி மேற்கொள்வான். முதலில்நான் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் நர்சிங்குக்கு 8 வயதாக இருந்தபோது, அங்கு நடந்த சிறுவர்களுக்கான போட்டியில் 8 பேரை வீழ்த்தி பரிசு வென்றான். என் கனவுகளை நனவாக்க நர்சிங்கால் முடியும் என்று நான் உணர்ந்த தருணம் அது” என்கிறார் பஞ்சம் யாதவ்.

நர்சிங் யாதவின் துடிப்பான செயல்பாடுகளைப் பார்த்து அங்கிருந்த சாய் (இந்திய விளையாட்டு ஆணையம்) அமைப்பின் பயிற்சியாளர் ஜக்மால் ஐங், நர்சிங் யாதவுக்கு தான் பயிற்சி அளிப்பதாக கூறியுள்ளார். சாய் அமைப்பின் ஹாஸ்டலில் நர்சிங் யாதவ் சேர்க்கப்பட்டார். நல்ல மல்யுத்த வீரனாக உருவாக கனவு மட்டும் போதாது வலிமையான உடலும் வேண்டும், அதற்கு சத்தான உணவு வேண்டும் என்பதால் அவரது குடும்பம் கடுமையாக உழைக்கத் தொடங்கியது.

நர்சிங் யாதவின் தந்தை மும்பையில் பால் வியாபாரம் செய்து பணத்தை ஈட்ட, அவரது தாய் உத்திரப்பிரதேசத்தில் உள்ள நீமா கிராமத்தில் விவசாயம் பார்த்து பணம் அனுப்பினார். இருவரின் ஒத்துழைப்பால் சிறந்த மல்யுத்த வீரனாகும் கனவைத் தவிர வேறு எந்த கவலையுமின்றி வளர்ந்தார் நர்சிங் யாதவ்.

ஒரு முறை மாவட்ட அளவில் நடந்த சப் ஜூனியர் மல்யுத்த போட்டியில் பங்கேற்க நர்சிங் யாதவிடம் 3 பாஸ்போர்ட் படங்களை கேட்டுள்ளனர். அதற்காக ஸ்டுடியோவுக்கு சென்ற நர்சிங் யாதவ் போட்டோகிராபரிடம் 3 படங்களுக்கு பதில் 12 படங்களைக் கேட்டுள்ளார். “எதற்கு இத்தனை படங்கள்?” என்று அவரது அண்ணன் கேட்க, “3 படங்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு. அதில் ஜெயித்தால் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டியிருக்கும். அதற்காக 3 படங்கள். அதிலும் ஜெயித்தால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க 3 படங்கள். இறுதியாக உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்க நேர்ந்தால் அதற்காக 3 படங்கள்” என்று கூறியிருக்கிறார் நர்சிங் யாதவ். அந்த அளவுக்கு அவர் தன்னம்பிக்கையுடன் இருந்துள்ளார்.

பயிற்சி முடித்த பிறகு உள்ளூரில் சிறிய பரிசுகளுக்காக மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்ட நர்சிங் யாதவை ரமாதார் யாதவ் என்ற பயிற்சியாளர் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றார். தேசிய அளவிலான போட்டிகளில் கவனம் செலுத்தவைத்தார். உள்ளூர் போட்டிகளில் ஜெயித்துவந்த நர்சிங் யாதவ், உலகின் கவனத்தைப் பெற்றது 2010-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்தான். இதில் 74 கிலோகிராம் எடைப்பிரிவில் தங்கம் வென்று ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்தார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்றவர் ஒலிம்பிக் போட்டியிலும் 74கிலோகிராம் எடைப்பிரிவில் தங்கம் வெல்ல தயாராக இருந்தார். அப்போதுதான் விதிவிளையாடியது. மல்யுத்த வீரர்கள்மோதுவதைப் பார்க்கும்போது, நண்டுகள் சண்டையிடுவதுபோல் இருக்கும். ஆனால் இதில் பங்கேற்கும் சில வீரர்களின் மனநிலையும் நண்டுகள் போன்றுஇருந்ததால், முன்னேறிக்கொண்டிருந்த நர்சிங் யாதவை பின்னுக்கு இழுக்கத் தொடங்கினர்.

சீனியரான தன்னை விட்டு நர்சிங் யாதவை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பும் முடிவை எதிர்த்து கோர்ட்டுக்கு போனார் மற்றொரு மல்யுத்த வீரரான சுஷில் குமார். இதிலிருந்து கடந்து வருவதற்குள் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் நடத்திய ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். இந்த விவகாரத்தில் தான் நிரபராதி என்று நர்சிங் யாதவ் கூற, இந்திய மல்யுத்த சங்கமும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கியது. ஜூனியர் வீரர் ஒருவர் நர்சிங் யாதவுக்கு தெரியாமல் அவரது உணவில் ஊக்கமருந்தை கலந்ததாக கூறப்பட்டது. இதுபற்றிகாவல்துறையில் நர்சிங் யாதவ்புகார் அளித்தார்.

மேற்கொண்டு விசாரணை நடத்திய தேசிய ஊக்கமருந்து ஆணையம், நர்சிங் யாதவை ஊக்கமருந்து விவகாரத்தில் இருந்து விடுவித்தது. அவரும் ‘ஒலிம்பிக்கில் ஜெயித்து வந்ததும் திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று பெற்றோரிடம் உற்சாகமாக ரியோவுக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் தேசிய ஊக்கமருந்து ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

நேற்று நர்சிங் யாதவின் மல்யுத்த போட்டி தொடங்குவதற்கு சில மணித்துளிகள் முன்பு நடுவர் மன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்தது. இதை எதிர்த்து அவர் வேண்டுமானால் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. ‘நர்சிங் யாதவ் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதற்கு சதிதான் காரணம் என்பதை சர்வதேச நடுவர் மன்றத்தில் சொல்லிப் புரியவைக்க முடியவில்லை’ என்று சோகத்துடன் சொல்லி கைவிரித்துள்ளது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு. தங்கள் மகன் பதக்கம் வாங்கி வருவான் என்று ஆரத்தியுடன் காத்திருந்த குடும்பம் கலங்கிப் போய் உள்ளது. நர்சிங் யாதவுக்கு எதிராக மிகப்பெரிய சதி நடந்துள்ளதாக கதறுகிறது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நர்சிங் யாதவ், “கடந்த 2 மாதங்களில் மல்யுத்த களத்துக்கு வெளியே நான் பல சோதனைகளை சந்தித்தேன். ஆனால் நம் நாட்டுக்காக மல்யுத்தக் களத்தில் மோதி பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை அந்த சோதனைகளைக் சந்திக்க உறுதுணையாக இருந்தன. ஆனால் போட்டிக்கு 12 மணிநேரம் முன்பு சர்வதேச நடுவர் மன்றம் எனக்கு தடை விதித்துள்ளது என்னை கடுமையாக பாதித்துள்ளது. நான் நிரபராதி என்பதை நிரூபிக்க தேவையான அனைத்தையும் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

நர்சிங் யாதவுக்கு நேர்ந்த சோகம், இந்த தேசத்துக்கே நேர்ந்த சோகமாகும். சக வீரர்களின் பொறாமையாலும், சதியாலும் இன்று கலங்கிப் போயிருக்கும் நர்சிங் யாதவுக்கு அதை எதிர்த்து நிற்கும் மனவலிமை கிடைக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x