Published : 22 Oct 2013 11:57 am

Updated : 06 Jun 2017 12:35 pm

 

Published : 22 Oct 2013 11:57 AM
Last Updated : 06 Jun 2017 12:35 PM

கோஸ்ட் கோல் போடலாமா..?

விளையாட்டுப் போட்டிகளில் சில எதிர்பாராத சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறும். அதுபோன்ற சமயங்களில் அப்போட்டி முடிவைவிட அந்தக் குறிப்பிட்ட நிகழ்வுதான் சர்வதேச முக்கியத்துவமும் பெறும். அந்த வகையில் சில நாள்களுக்கு முன்பு ஜெர்மனியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் 'கோஸ்ட் கோல்' போட்ட அரிய நிகழ்வு நடந்தது.

கோஸ்ட் என்றதும் பேய், பூதம் அல்லது பிசாசு வந்து கோல் போட்டது என்று அர்த்தப்படுத்த வேண்டாம். அப்படி நடக்கவும் செய்யாது. லிப்கோ முதல் ஆக்ஸ்போர்டு வரையிலான அகராதிகளை புரட்டிப் பார்த்தால் கோஸ்ட் என்பதற்கு பொய்த்தோற்றம், உருவெளிக்காட்சி என்ற அர்த்தங்களும் கிடைக்கும். அந்த அர்த்தத்திலேயே இங்கு கோஸ்ட் கோலைப் புரிந்து கொள்ளலாம்.


ஜெர்மனியில் நடைபெற்று வரும் கால்பந்து பெடரல் லீக் போட்டியில் பேயர் லிவர்குஸென் காபென்ஹிம் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டம் அது. இரண்டாவது பாதியில் பேயர் லிவர்குஸென் அணி ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது.

இதனால் பிற்பாதி ஆட்டம் வேகமெடுத்தது.

ஆட்டம் முடிய 20 நிமிடங்களே இருந்த நிலையில், பெனால்டி கார்னரில் இருந்து வந்த பந்தை பேயர் லிவர்குஸென் அணியின் ஸ்டீபன் கிஸ்ஸிலிங் கோல் கம்பத்தை நோக்கி தலையால் முட்டித் தள்ளுகிறார். தடுக்க முயற்சித்து கோல் கீப்பர் தாவிப் பறக்கிறார்.

ஆனால் அடுத்த நொடியிலேயே கோல் வலைக்குள் பந்து இருக்கிறது. கோல்…. ஒரே மகிழ்ச்சி ஆரவாரம். பேயர் லிவர்குஸென் அணியின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. நடுவர் பெலிக்ஸ், அதனை கோல் என்று உறுதி செய்கிறார். இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெறுகிறது பேயர் லிவர்குஸென்.

கடுமையாகப் போராடிய காபென்ஹிம் அணியினர் ஒரு கோல் மட்டுமே அடித்து தோற்று வெளியேறுகின்றனர். இந்த வெற்றி மூலம் போட்டிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது பேயர் லிவர்குஸென். நிற்க… இந்த போட்டியில் அடிக்கப்பட்ட கோல்களை டி.வி. ரீப்ளேயில் உற்று கவனித்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி. ஸ்டீபன் அடித்த பந்து, கோல் போஸ்ட் வழியாக வலைக்குள் செல்லாமல், இடது பக்கம் வலையின் வெளிப்பக்கம் மோதி, வலையை பிய்த்துக் கொண்டு உள்ளே சென்றது தெளிவாகத் தெரிந்தது. உடனே வந்தது வாக்குவாதம், ஆரம்பித்தது பிரச்னை.

போட்டி ஏற்பாட்டாளர்கள் கோல் போஸ்ட்டை நெருங்கிச் சென்று சோதனையிட்டபோதுதான் தெரிந்தது. பந்து மோதிய வேகத்தில் வலையில் இருந்த ஒரு முடிச்சு அவிழ்ந்து, அதன் வழியாக பந்து உள்ளே சென்றது என்பது. கால்பந்துப் போட்டியில் மிகவும் அரிதான, சர்ச்சைக்குரிய நிகழ்வு இது.

பந்து எப்படி கோல் போஸ்ட்டுக்குள் சென்றது என்பதை சரியாக கவனிக்காமல் கோல் என்று அறிவித்த நடுவர் பெலிக்ஸ் மீது அனைவரது குற்றச்சாட்டு பார்வையும் திரும்பியது.

இது தொடர்பாக விளக்கமளித்த அவர், அந்த கோலில் எனக்கும் சிறிது சந்தேகம் இருந்தது. எனினும் களத்தில் வீரர்கள் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் எழவில்லை.

எனவே அதனை கோல் என்று அறிவித்தேன் என்று கூறியுள்ளார். அந்த கோலை சற்று தயக்கத்துடனேயே உறுதி செய்தார் என்பதும் உண்மை.

ஆனால், இந்த ஆட்டத்தை மீண்டும் நடத்த வேண்டுமென்று தோல்வியடைந்த கா பென்ஹிம் அணியினர் வலியுறுத்தியுள்ளனர். இப்பிரச்னையை சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடமும் (ஃபிபா) அவர்கள் எடுத்துச் செல்ல இருக்கின்றனர்.

சர்ச்சைக்குரிய கோலை அடித்த ஸ்டீபன் கிஸ்ஸிங், இது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார். நான் அடித்தது நியாமான கோல் இல்லை. பந்தை தலையால் முட்டி விட்டு பார்த்தபோது பந்து கோல் போஸ்ட்டுக்குள் இருந்தது.

எனவே அப்போது அது சரியான கோல் என்றுதான் தோன்றியது. ஆனால் ரீபிளேயில் அது முறையாக போடப்பட்ட கோல் இல்லை என்பது தெரிகிறது.

இதற்காக கால்பந்து ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். விளையாட்டில் நேர்மையாக போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் உடையவன் நான் என்று அவர் கூறினார்.

சேம் சைட் கோல்தான் நமக்குத் தெரியும், இப்போது கோஸ்ட் கோல் ஆபத்தும் உள்ளது ஆச்சரியமான விஷயம்தானே!


'கோஸ்ட் கோல்சேம் சைட்கால்பந்து

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x