

நியூஸிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் குவித்தது. பவார், சூர்யகுமார் யாதவ் சதம் விளாசினர்.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 75 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. டாம் லதாம் 55, வில்லியம்சன் 50, ராஸ் டெய்லர் 41 ரன்கள் எடுத்தனர்.
மும்பை அணி தரப்பில் சாந்து இரு விக்கெட் வீழ்த்தினார். மும்பை சுழற்பந்து வீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக 45 ஓவர்களை வீசிய போதும் 3 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
இதையடுத்து பேட் செய்த மும்பை அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 13 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்தது. ஜெய் பிஸ்டா ரன் எதும் எடுக்காமல் டிரென்ட் பவுல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். பவார் 5, அர்மான் ஜாபர் 24 ரன்களுடன் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இருவரும் நிதானமாக விளை யாடினர். அர்மான் ஜாபர் 69 ரன் களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த ரோஹித் சர்மா 18 ரன்கள் எடுத்த நிலையில் வாட்லிங்கால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இந்த விக்கெட்டை இஷ் சோதி கைப்பற் றினார்.
4-வது விக்கெட்டுக்கு பவாருடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். அவர் 86 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் விளாசிய நிலையில் ஷான்ட்நெர் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பவார்-சூர்யகுமார் யாதவ் ஜோடி 27.2 ஓவர்களில் 155 ரன்கள் குவித்தது சிறப்பம்சமாக இருந்தது. 228 பந்துகளில், 15 பவுண் டரிகள், 1 சிக்ஸருடன் 100 ரன்கள் எடுத்த நிலையில் பவார், ரிட்யர்டு முறையில் வெளியேறினார். இதை யடுத்து களம்புகுந்த கேப்டன் ஆதித்யா தாரே, சிதேஷ் லாடு ஜோடியும் நியூஸிலாந்து பந்து வீச்சை பதம் பார்த்தது. இதனால் அணியின் ஸ்கோர் 400 ஆக உயர்ந்தது.
இருவரும் அரை சதம் அடித் தனர். மும்பை அணி 106 ஓவர் களில் 6 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் குவித்தது. சிதேஷ் லாத் 89 ரன்களுடனும் வல்சங்கர் ரன் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தாரே 53 ரன்களில் ரிட்டையர்டு அவுட் ஆனார். நேற்று மட்டும் மும்பை அணி 90 ஓவர்களில் 402 ரன்களை குவித்து மிரட்டி உள்ளது.
நியூஸிலாந்து அணி தரப்பில் 8 பந்து வீச்சாளர்கள் பயன்படுத் தப்பட்டனர். அதிகபட்சமாக இஷ் சோதி இரு விக்கெட்கள் வீழ்த் தினார்.