

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என வென்றது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், டிரெவர் ஹெட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 284 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
அடிலெய்டு நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 369 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், டிரெவர் ஹெட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 284 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஜோடியின் 2-வது சிறந்த ரன் குவிப் பாக இது அமைந்தது. இதற்கு முன்னர் 2006-ல் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கையின் ஜெய சூர்யா-தரங்கா ஜோடி 286 ரன்கள் விளாசியதே அதிகபட்ச ரன் குவிப்பாக உள்ளது. வார்னர்-ஹெட் ஜோடியை பாகிஸ்தான் வீரர்களால் 41.3-வது ஓவரில்தான் பிரிக்க முடிந்தது. வார்னர் 128 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 179 ரன்களும், டிரெவர் ஹெட் 137 பந்துகளில், 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 128 ரன்களும் விளாசி ஆட்டமிழந் தனர். பாகிஸ்தான் தரப்பில் ஜூனைத் கான், ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
370 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 312 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாபர் அசாம் 100, ஷர்ஜீல்கான் 79, உமர் அக்மல் 46 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 4-1 என வென்றது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனான டேவிட் வார்னர் தேர்வானார்.