உமர் அக்மல், சொஹைல் கான் கிரிக்கெட் வாழ்க்கையைத் நாசமாக்க மிக்கி ஆர்தர் யார்? - அப்துல் காதிர் காட்டம்

உமர் அக்மல், சொஹைல் கான் கிரிக்கெட் வாழ்க்கையைத் நாசமாக்க மிக்கி ஆர்தர் யார்? - அப்துல் காதிர் காட்டம்
Updated on
1 min read

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தருக்கு வானளாவிய அதிகாரம் கொடுத்தது யார்? இந்நிலை நீடித்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் மேலும் பிரச்சினைகளையே சந்திக்கும் என்று முன்னாள் லெக்ஸ்பின்னர் அப்துல் காதிர் தெரிவித்தார்.

நேர்காணல் ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த அயல்நாட்டு பயிற்சியாளர் மிக்கி ஆர்தருக்கு இவ்வளவு அதிகாரம் கொடுத்தது யார் என்று தெரியவில்லை, உமர் அக்மல் சொஹைல் கான் கிரிக்கெட் வாழ்க்கையை நாசமாக்க இவர் யார்? அணியின் தலைமைத் தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் மீதும் எனக்கு திருப்தியில்லை. பயிற்சியாளர் முன் இவர் அதிகாரமற்ற கோழையாக இருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு முன்னேறி விட்டோம் என்பது சொஹைல் கான், உமர் அக்மலுக்கு இவர் செய்ததை நியாயப்படுத்தாது. சில வீரர்களுக்கு இவர் சாதகமாக இருக்கிறார், மொகமது ஆமிர் அப்படித்தான் அணியில் இருக்கிறார்.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆமிர் 5 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டியில் கைப்பற்றினார், ஆனால் சொஹைல் கன் இருமுறை இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் சீராகவே ஆடி வந்தார் சொஹைல் கான், ஆனால் அவர் இன்று அணியில் இல்லை.

தகுதியில்லாத வீரர்கள் தற்போது அணியில் உள்ளனர். உமர் அக்மல் நடத்தப்பட்ட விதம் அவரை இங்கிலாந்திலிருந்து அனுப்பிய விதம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த வேண்டும்.

இந்த முடிவுகளுக்கெல்லாம் யார் காரணம் என்பது தெரியவிலை. நாட்டில் பெரிய பெரிய வீர்ர்களெல்லாம் இருந்தும் நாம் ஒரு அயல்நாட்டுப் பயிற்சியாளரை கொண்டு வருகிறோம், அவரோ நம் வீரர்களை சூதாடிகள் என்று கூறி சில வீரர்களுக்கு அநீதி இழைக்கிறார்” என்று கடுமையாக சாடினார் அப்துல் காதிர்.

பாகிஸ்தான் முன்னாள் பவுலர் ஷோயப் அக்தர் கூறும்போது, “பாபர் ஆஸமுக்குப் பதில் ஷோயப் மாலிக்கை முன்னால் களமிறக்க வேண்டும் அவர் ஒன்று இரண்டு என்று ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வார். பாபர், ஹபீஸ் ஆகியோர் செட்டில் ஆக காலம் எடுத்துக் கொள்வர்.

வாசிம் அக்ரம் கூறும்போது, “இமாத் வாசிம் அணியில் இடம்பெற தகுதியில்லாதவர், அவர் முழுமையான பவுலரும் அல்ல, பேட்ஸ்மெனும் அல்ல, ஆனால் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் நுழைந்ததைக் கொண்டாட வேண்டும் கடைசியில் முடிவுதான் முக்கியம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in