

கோவளத்தில் சர்ஃபிங் எனப்படுகிற அலைச் சறுக்கு விளையாட்டை கற்றுக்கொடுக்க “கோவளம் சமூக சர்ஃபிங்” பள்ளி செயல்பட்டு வருகிறது. அலைச் சறுக்கு விளையாட்டோடு சேர்த்து சமூக பொறுப்பையும் அப்பகுதி மாணவர்களுக்கு பள்ளி ஊட்டி வருகிறது. இப்பள்ளி மூர்த்தி நாகவன் என்ற மீனவ சமுதாயத்தை சேர்ந்த இளைஞரால் 2012ல் தொடங்கப்பட்டது. இவர் கோவளத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக சர்ஃபிங் சொல்லி தருகிறார். பதிலுக்கு அந்த மாணவர்கள் கடலோரத்தை சுத்தப்படுத்த வேண்டும். குடி, சிகரெட் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
“இந்த பள்ளி சர்ஃபிங் பள்ளியாக மட்டும் இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. இது இந்த சமூகத்துக்கு உதவ வேண்டும். இந்தப் பகுதி பிள்ளைகள் அலைச் சறுக்கு கற்றுக் கொள்வது அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரமாகவும் அமையும். இந்த பகுதி மாணவர்களை தவிர வேறு இடங்களிலிருந்து வருபவர்களிடம் கட்டணம் வாங்குவேன். அவர்களுக்கு கோவளத்து இளைஞர்கள் பயிற்சி அளித்தால் அவர்களுக்கு பணம் தந்து விடுவேன். “ என்றார் மூர்த்தி.
இரண்டு வருடமாக அலைச் சறுக்கு பள்ளியில் பயின்று வரும் பத்தாம் வகுப்பு மாணவர் ந.சந்தோஷன், “நான் ஒரிஸா, கேரளா, பாண்டிச்சேரியில் நடந்த அலைச்சறுக்கு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். மூர்த்தி அண்ணன் தான் செலவெல்லாம் பார்த்து கொண்டார். என் படிப்பு செலவுக்கும் பணம் தருகிறார். நான் சிறந்த அலைச் சறுக்கு வீரராக வேண்டும் என்பது தான் எனது ஆசை” என்றார்.
இந்தப் பள்ளி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் டி.டி. லாஜிஸ்டிக்ஸை சேர்ந்த அருண் வாசு. “இந்தப் பள்ளியின் நோக்கம் அலைச் சறுக்கு விளையாட்டை ஊக்கப்படுத்துவது. அதை விட முக்கியமாக இதன் மூலம் இந்த மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்வது. எனவே தான் இங்குள்ள 25 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக் கொண்டுள்ளோம். இதில் அலைச் சறுக்கு கற்றுக் கொள்ளாத பிள்ளைகளும் உள்ளனர்.” என்றார் அவர்.
மூர்த்தியின் அலைச் சறுக்கு ஆர்வத்திற்கு உயிரூட்டிய இன்னொருவர், எர்த் சிங் என்ற இசை நிறுவனத்தைச் சேர்ந்த யோத்தம் என்பவர். “ நான் மூர்த்தியை முதன் முதலில் பார்த்த போது எனது அலைச் சறுக்கு பலகையை வாங்கி முயற்சி செய்தார். அவரிடம் இயல்பாகவே இருந்த ஆர்வத்தை நான் கண்டு கொண்டு இந்தப் பள்ளி அமைக்க உதவினேன். இப்போது நாட்டின் சிறந்த அலைச் சறுக்கு வீரர்கள் கோவளத்தில் தான் உள்ளனர். மூர்த்தியைப் பற்றி ஒரு ஆவணப் படமும் தயாராகி வருகிறது. “ என்றார்.