

நடப்பு உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையிலான உலக செஸ் போட்டி சென்னையில் சனிக்கிழமை தொடங்குகிறது.
சவால் நிறைந்த இந்த மூளைக்காரர்களின் விளையாட்டில் பட்டம் வெல்வது யார் என்பதை எதிர்பார்த்து உலகமே காத்துக்கொண்டிருக்கிறது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயத் ரீஜென்ஸி ஹோட்டலில் நடைபெறும் இந்தப் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 6-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறார்.
22 வயது வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்ஸென் தனது முதல் உலக சாம்பியன்ஷிப்பில் களம் காண்கிறார்.
2007 முதல் உலக செஸ்ஸில் அசைக்க முடியாத சக்தியாக திகழும் ஆனந்த், கார்ல்சனுக்கு எதிரான ஆட்டத்தில் தாக்குதல் பாணி ஆட்டத்தை வெளிப்படுத்தத் தயார் எனக்கூறி கார்ல்சனுக்கு சவால் விடுத்திருக்கிறார்.
தனது பயிற்சிக்கு உதவியவர்களின் (செகன்ட்ஸ்) பெயரையும் ஆனந்த் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் கார்ல்சனோ தனக்கு பயிற்சிக்கு உதவிய
வர்களின் பெயர்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
13 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றியவரான மேக்னஸ் கார்ல்சனுக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக முன்னாள் உலக சாம்பியன்களும், உலகின் முன்னணி செஸ் வீரர்களும் தெரிவித்து
ள்ளனர். இளம் வயதும், அபார நினைவாற்றலும் கார்ல்சனுக்கு சாதகமான விஷயங்களாகப் பார்க்கப்படுகிறது.
19 வயதில் உலகின் முதல் நிலை வீரராக உருவெடுத்த கார்ல்ஸென், இப்போது வரை தொடர்ந்து அந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இளம் வயதில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தவரான கார்ல்சன், 2870 இ.எல்.ஓ. ரேட்டிங் புள்ளிகளை வைத்திருக்கிறார்.
செஸ் வரலாற்றில் எந்தவொரு வீரரும் எட்டாத ரேட்டிங் புள்ளியை எட்டியுள்ளார் கார்ல்சன், போட்டியின் நடு மற்றும் இறுதிக் கட்டங்களில் லாவகமாக காய்களை நகர்த்தும் ஆற்றல் கொண்டவர்.
இதுபோன்ற விஷயங்கள் கார்ல்சனின் பலமாக பார்க்கப்படுகிறது. முதல் மற்றும் கடைசி சுற்றுகளில் வெள்ளைக் காயுடன் விளையாடுவது கார்ல்சனுக்கு சாதகமானது.
ஆனால் “மேட்ச் பிளே” முறையில் பெரிய அனுபவம் இல்லாததும், இதுவரை உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியது இல்லை என்பதும் அவருடைய பலவீனமாகும்.
ஆனால் ஆனந்தோ, கடந்த 3 உலக செஸ் போட்டிகளிலும் மேட்ச் பிளே முறையில்தான் வெற்றி கண்டுள்ளார். போட்டியின் தொடக்கத்தில் நுட்பமாக காய்களை நகர்த்தக்கூடிய ஆற்றல் பெற்றவர்.
ஆனந்தின் மதிநுட்பமும் கூர்மையான திறனும் அவருக்கு பெரிய பலம் ஆகும். சரிவிலிருந்து மீண்டு எதிராளியை வீழ்த்தும் ஆற்றல் பெற்றவரான ஆனந்த், கார்ல்சனை வீழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சொந்த ஊரான சென்னையில் விளையாடுவது அவருக்கு கூடுதல் பலமாகும்.
உலக செஸ்ஸில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஆனந்த், 6-வது முறையாக பட்டம் வெல்வாரா அல்லது முதல்முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் களமிறங்கும் கார்ல்ஸென், ஆனந்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதுதான் உலக செஸ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
கறுப்புக் காயுடன் களமிறங்கும் ஆனந்த்
இந்தப் போட்டியின் முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் கறுப்புக் காயுடனும், மேக்னஸ் கார்ல்சன் வெள்ளைக் காயுடனும் களமிறங்குகின்றனர். செஸ் விதிமுறைப்படி வெள்ளைக் காயுடன் களமிறங்குபவர்தான் முதலில் காயை நகர்த்துவார்.
கார்ல்சன் 1, 3, 5, 8, 10, 12 ஆகிய சுற்றுகளில் வெள்ளைக் காயுடன் விளையாடுவார். விஸ்வநாதன் ஆனந்த் 2, 4, 6, 7, 9, 11 ஆகிய சுற்றுகளில் வெள்ளைக் காயுடன் விளையாடுவார்.
ஒருவேளை போட்டி டைபிரேக்கர் வரை செல்லும் பட்சத்தில் அதில் யார் எந்தக் காயுடன் முதல் சுற்றில் களமிறங்குவது என்பதை போட்டியின் தலைமை நடுவர் உறுதி செய்வார்.
புள்ளி விவரம்
ஒரு போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். டிராவானால் இருவருக்கும் தலா அரை புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும்.
போட்டி விதிமுறைகள்
1.ஒவ்வொரு முறையும் ஒரு கையால்தான் காயை நகர்த்த வேண்டும்.
2.போட்டிக்கு உரிய நேரத்தில் வரவேண்டும். போட்டி தொடங்கிய பிறகு ஒரு வீரர் வரும்பட்சத்தில் அந்த சுற்றில் அவர் தோற்றதாக அறிவிக்கப்படும்.
3. ஒரு வீரர் எந்த கையால் காயை நகர்த்துகிறாரோ அதே கையால்தான் அவருடைய நேரம் காட்டியில் (கிளாக்) உள்ள பொத்தானை அழுத்த வேண்டும்.
4. போட்டியில் விளையாடும்போது வீரர்கள் தங்களுடைய நேரம் காட்டியின் மீதோ அல்லது அதில் உள்ள பொத்தானின் மீதோ கையை வைத்துக் கொண்டிருக்கக்கூடாது.
டிராவில் முடிப்பதற்கான விதிகள்
1.கறுப்புக் காயின் 30-வது நகர்த்தலுக்குப் பிறகுதான் போட்டியை டிராவில் முடிப்பதற்கு இரு வீரர்களும் நடுவரை நாட முடியும்.
2.போட்டியை டிராவில் முடிக்க நினைக்கும் ஒரு வீரர், காயை நகர்த்திவிட்டு தனது நேரம் காட்டியில் உள்ள பொத்தானை அழுத்துவதற்கு முன்னதாக (அதாவது எதிர் வீரரின் நேரம் தொடங்குவதற்கு முன்னதாக) அது குறித்து தெரிவிக்க வேண்டும்.
3. ஒருவர் போட்டியை டிராவில் முடிக்க விரும்பினால் அதை தனது ஸ்கோர் சீட்டில் ‘=’ என குறிக்க வேண்டும்.
4. ஒரு காய் ஏற்கெனவே இருந்த கட்டத்திற்கு மூன்றாவது முறையாக வரும்போது ஒரு வீரர் தனது காயை நகர்த்துவதற்கு முன்னதாக அதை சுட்டிக்காட்டி போட்டியை டிராவில் முடிக்குமாறு நடுவரிடம் கோரலாம்.
5.தொடர்ச்சியாக 50 காய் நகர்த்தலுக்குப் பிறகு சிப்பாய் நகராமல் இருந்தாலோ அல்லது சிப்பாய் வெட்டப்படாமல் இருந்தாலோ போட்டியை டிராவில் முடிக்குமாறு கோரலாம்.
போட்டி நடைபெறும் முறை
போட்டியின் ஒவ்வொரு சுற்றிலும் இருவருக்கும் முதல் 40 காய் நகர்த்துதலுக்கு தலா 2 மணி நேரம் வழங்கப்படும். அடுத்த 20 காய் நகர்த்துதலுக்கு தலா ஒரு மணி நேரம் வழங்கப்படும். அதன்பிறகு இருவருக்கும் தலா 15 நிமிடங்கள் வழங்கப்படும். 61-வது நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு காய் நகர்வுக்கும் தலா 30 விநாடிகள் நேரம் அதிகரிக்கப்படும்.
ஒருவேளை 12 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும் பட்சத்தில் டைபிரேக்கர் முறை மூலம் வெற்றி தீர்மானிக்கப்படும்.
அதில் முதலில் 4 ரேபிட் போட்டிகள் நடத்தப்படும். இதில் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும். அதில் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 விநாடிகள் நேரம் அதிகரிக்கப்படும்.
இதன் முடிவிலும் இருவரும் சமநிலையில் இருந்தால், இரு பிளிட்ஸ் போட்டிகள் நடத்தப்படும். அதில் ஒவ்வொருவருக்கும் தலா 5 நிமிடங்கள் வழங்கப்படும். ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 3 விநாடிகள் நேரம் அதிகரிக்கப்படும். இதே போன்று மொத்தம் 5 பிளிட்ஸ் போட்டிகள் நடத்தப்பட்ட பிறகும் இருவரும் சமநிலையில் இருந்தால், “சடன் டெத் கேம்” என்ற முறையில் வெற்றி தீர்மானிக்கப்படும்.
அதில் வெள்ளைக் காய்களுடன் விளையாடுபவருக்கு 5 நிமிடங்க ளும், கறுப்புக் காய்களுடன் விளை யாடுபவருக்கு 4 நிமிடங்களும் வழங்கப்படும். இதில் 61-வது நகர்த்தலில் இருந்து 3 விநாடிகள் நேரம் அதிகரிக்கப்படும். இதுவும் டையில் முடிந்தால், கறுப்புக் காய்களுடன் விளையாடியவர் சாம்பியன் ஆவார்.
ஆனந்த் வென்ற 5 பட்டங்கள்
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற ஒரே இந்தியரான ஆனந்த், 2000-ம் ஆண்டில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன்பிறகு 2002-ல் உலக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பை இழந்த ஆனந்த் 2007, 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக செஸ் போட்டிகளில் தொடர்ச்சியாக வாகை சூடி வெல்ல முடியாத சாம்பியனாக திகழ்ந்து வருகிறார்.
புதிய சாதனைக்கு காத்திருக்கும் ஆனந்த்
இந்த முறை பட்டம் வெல்லும் பட்சத்தில் உலக செஸ்ஸில் அதிக பட்டங்கள் வென்றவர்கள் வரிசையில் ஜெர்மனியின் இமானுவேல்
லஸ்கர், ரஷியாவின் கேரி காஸ்பரோவ், அனாடோலி கார்போவ் ஆகியோருடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்வார் ஆனந்த். அவர்கள் 3 பேரும்
இதுவரை 6 பட்டங்கள் வென்று உள்ளனர்.