Published : 21 Feb 2017 11:51 AM
Last Updated : 21 Feb 2017 11:51 AM

இனி என் தந்தை ஆட்டோ ஓட்ட வேண்டிய தேவையில்லை: ஐபிஎல் ஏலத்துக்குப் பிறகு மொகமது சிராஜ்

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் மொகமது சிராஜை சன் ரைசர்ஸ் அணி ரூ.2.6 கோடிக்கு ஏலம் எடுத்தது அவருக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஐபிஎல் ஏலம் நேற்று நடைபெற்றது, இதில் இதுவரை ஆடாத பல வீரர்களுக்கு நல்ல விலை கிடைத்துள்ளது, இதில் மொகமது சிராஜும் ஒருவர்.

ரூ.2.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது குறித்து மொகமது சிராஜ் கூறும்போது, “ஏதாவது ஒரு அணி என்னைத் தேர்வு செய்யும் என்று தெரியும். ஆனால் சன் ரைசர்ஸ் அணி எனக்கு அளித்துள்ள விலை நான் எதிர்பார்க்காதது, நம்ப முடியாதது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு மிகப்பெரிய தினமாகும்.

நிச்சயமாக என் தந்தை (மொகமது கோஸ்) ஆட்டோ ஓட்ட வேண்டிய தேவை இருக்காது. அவர் 30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார்.

அவர் எங்களுக்காக நிறைய தியாகங்கள் செய்துள்ளார், இப்போது அவரையும் என் குடும்பத்தையும் நான் பார்த்துக் கொள்ள வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.

முதல் இலக்கு இந்தியா ஏ அணிக்கு ஆட வேண்டும், தற்போது இந்த ஐபிஎல் வாய்ப்பை அதற்கான ஒரு படியாக பயன்படுத்துவேன். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டுக்கு முன் என்னை நான் நிரூபித்தாக வேண்டும்.

ரஞ்சி டிராபியில் நாக் அவுட் போட்டியில் மும்பைக்கு எதிராக நான் எடுத்த 9 விக்கெட்டுகள் என் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பு முனையாகும்.

டி20 எனக்கு புதிதல்ல என்றாலும் தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக சிறு மாற்றங்களை என் பந்து வீச்சில் நான் மேற்கொண்டாக வேண்டும். வேகம் குறைவான பந்துகள், யார்க்கர்களை வீசுவதில் நான் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது.

நான் பயிற்சியாளர் பாரத் அருண் (ஹைதராபாத் பயிற்சியாளர்) அவர்களுக்கும் கேப்டன் பத்ரிநாத்துக்கும் என் நன்றியை பதிவு செய்ய கடமைப் பட்டுள்ளேன். இவர்கள் தான் எனது வலிமைக்கு ஆதாரமானவர்கள்.

அதே போல் சக ஹைதராபாத் பவுலர்கள் சமா மிலிந்த், ரவி கிரண் ஆகியோரும் எப்போதும் என்னை ஊக்குவித்து வந்துள்ளனர்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியை எதிர்நோக்குகிறேன், அதில் கிறிஸ் கெய்ல், விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோருக்கு எதிராக நன்றாக வீச விரும்புகிறேன்” என்றார் சிராஜ்.

ரஞ்சி சீசனில் 41 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் சிராஜ். இவரை முன்னாள் ஹைதராபாத் ரஞ்சி வேகப்பந்து வீச்சாளரும் ஹைதராபாத் தேர்வுக்குழு தலைவருமான ஜோதி பிரசாத் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x