

கார்டிப் மைதானத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று இலங்கையை முதலில் பேட் செய்ய அழைத்த பாகிஸ்தான் அருமையான பந்து வீச்சின் மூலம் இலங்கையை 236 ரன்களுக்குச் சுருட்டியது.
தொடக்க வீரர் டிக்வெல்லா அதிகபட்சமாக 73 ரன்களை எடுக்க மேத்யூஸ் 39 ரன்களை எடுத்தார்.
மொகமது ஆமிர் இதற்கு முந்தைய ஆட்டங்களில் விக்கெட் எடுக்கவில்லை, ஆனால் இன்று கேப்டன் மேத்யூஸ், டிக்வெல்லாவை விரைவில் வீழ்த்தினார், ஜுனைத் கான், ஹசன் அலி ஆகியோர் அருமையான ஸ்விங் பவுலிங் மூலம் இலங்கையின் பின்கள வீரர்களை விரைவில் வீட்டுக்கு அனுப்பினர். அசேலா குணரத்னே 27 ரன்களையும் சுரங்க லக்மல் 26 ரன்களையும் எடுத்து பங்களிப்பு செய்ய இலங்கை அணி 49.2 ஓவர்களில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மொகமது ஆமிர் 53 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜுனைத் கான் 10 ஓவர்களில் 3 மெய்டன்களுடன் 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 10 ஓவர்களில் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆல்ரவுண்டர் பாஹிம் அஷ்ரப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொத்தம் 164 டாட் பால்கள். இலங்கை அணி 16 நான்குகளையும் ஒரேயொரு ஆறையும் அடித்தது.
குணதிலக நன்றாக ஆடிவந்த நிலையில் 13 ரன்கள் எடுத்திருந்த போது ஜுனைத் கான் பந்தை மிட் ஆஃபுக்கு மேல் தூக்கி அடிக்க முயன்றார் ஆனால் மட்டையில் சரியாகச் சிக்கவில்லை நேராக ஷோயப் மாலிக் கையில் உட்கார்ந்தது.
மெண்டிஸ் இறங்கி அருமையான 4 பவுண்டரிகளை அடித்து 27 ரன்களுக்கு நன்றாக ஆடினார், ஆனால் ஹசன் அலி வீசிய அருமையான லேட் ஸ்விங் ஆன பந்து முதலில் மிடில் ஸ்டம்புக்கு உள்ளே வந்து பிறகு சற்றே வெளியே ஸ்விங் ஆக ஆஃப் ஸ்டம்பை தொந்தரவு செய்தது. சந்திமால், ஃபாஹிம் அஷ்ரப் பந்தை காலை நகர்த்தாமல் கவர் திசையில் அடிக்க நினைத்து மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார். அஷ்ரபின் முதல் சர்வதேச விக்கெட்டாகும் இது.
83/3 என்ற நிலையில் டிக்வெல்லாவும் மேத்யூஸும் இணைந்தனர் ஸ்கோரை 161 ரன்களுக்கு உயர்ந்த்து, ஆனால் இதற்கு 16 ஓவர்கள் தேவைப்பட்டது, நிலை நிறுத்தி பின்பு அடிக்கும் உத்தியுடன் இருவரும் ஆடினர், மேத்யூஸ் 54 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து அப்போது ஆமிரின் வழக்கமான கோணத்தில் சென்ற பந்தை லெக் திசையில் அடிக்க முயன்றார் ஆனால் மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். இது திருப்பு முனையானது.
டிசில்வா 1 ரன்னில் ஜுனைத்கானின் அபாரமான பந்துக்கு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். உடனடியாக 73 ரன்களுடன் ஆடி வந்த டிக்வெல்லாவின் மட்டையில் உள்விளிம்பில் பட்டு ஆமீர் பந்தில் விக்கெட் கீப்பர் சர்பராஸின் அசாத்தியமான கேட்சிற்கு வெளியேறினார்.
161/3 என்பதிலிருந்து 162/6 என்று ஆனது இலங்கை, அதன் பிறகுதான் குணரத்னே 27 ரன்களையும் லக்மல் 26 ரன்களையும் எடுக்க, மற்றவர்களை ஜுனைத்கான், ஹசன் அலி பதம் பார்க்க 236 ரன்களுக்குச் சுருண்டது.
பாகிஸ்தான் அட்டவணையில் முதலிடம் பெற வேண்டுமெனில் இலங்கையின் 236 ரன்களை 10 ஓவர்களில் அடிக்க வேண்டும். இது முடியாத காரியம் என்பதால் முதலிடம் பிடிக்க வாய்ப்பேயில்லை.