

ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவுக்கு 4 நாட்களுக்கு முன்னதாகவே இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங்கின் தாத்தா இறந்துவிட்டார். எனினும் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காகவே தாத்தாவின் மரணச் செய்தி சர்தார் சிங்கை சென்றடையாமல் அவரது குடும்பத்தினர் பார்த்துக் கொண்டது இப்போது தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி அளித்த விருந்தில் கலந்துகொண்ட சர்தார் சிங், இது தொடர்பாக கூறுகையில், “தாத்தாவின் மரணச் செய்தி அறிந்தால் நான் வருத்தப்படுவேன். அதனால் எனது ஆட்டத்திறன் பாதிக்கப்படும் என்பதற்காகவே அவருடைய மரணத்தை எனது குடும்பத்தினர் எனக்கு தெரிவிக்கவில்லை. எனது குழந்தைப் பருவம் முதலே தாத்தாவுடன் மிக நெருக்கமாக இருந்திருக்கிறேன்.
தொடக்க விழாவுக்கு முன்னதாக எனது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் தேசிய கொடி ஏந்திச் செல்லவிருக்கிறேன். தொலைக்காட்சியில் பாருங்கள் என்று கூறினேன். அப்போதுகூட தாத்தா இறந்ததை என்னிடம் சொல்லவில்லை. இறுதிப் போட்டி முடிந்த பிறகுதான் தாத்தாவின் மரணம் பற்றி எனக்குத் தெரியவந்தது. ” என்றார்.