

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறி உள்ள இந்திய வீரர்களான விகாஸ் கிருஷன், சிவா தபா, சுமித் சங்வான், அமித் பன்கல் ஆகியோர் வரும் ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ் கண்ட் நகரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் நிலை வீரரான இந்தியாவின் விகாஸ் கிருஷன் 75 கிலோ எடை பிரிவு கால் இறுதியில் இந்தோனேஷியாவை சேர்ந்த பிரம ஹெந்த்ராவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் 4-ம் நிலை வீரரான கொரியாவின் டாங்யன் லீயை எதிர்கொள்கிறார் விகாஷ் கிருஷன்.
4-ம் நிலை வீரரான சிவா தபா 60 கிலோ எடை பிரிவு கால் இறுதியில் சீன தைபேவின் சூ என் லாயை தோற்கடித்தார். அரை இறுதியில் சிவா தபா, மங்கோலியாவை சேர்ந்த சின்சோரிக் பாத்தார்சுக்குடன் மோதுகிறார்.
91 கிலோ எடை பிரிவு கால் இறுதியில் சுமித் சங்வான் 4-1 என்ற கணக்கில் சீனாவின் பெங்ஹையை வீழ்த்தினார். அரை இறுதியில் சங்வான், தஜிகிஸ்தானின் ஜேக்ஹான் குர்பனோவுடன் மோத உள்ளார்.
49 கிலோ எடை பிரிவில் சுமித் பன்கல் 4-1 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் கார்னலிஸ் குவாங் லாங்கை தோற்கடித்தார். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தானை சேர்ந்த ஹசன்பாய் டஸ்மடோவை அரை இறுதியில் எதிர்கொள்கிறார் சுமித் பன்கல். 56 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் கவுரவ் பிதுரி, 2-ம் நிலை வீரரான சீனாவின் ஜியாவீ ஜாங்கிடம் தோல்வி யடைந்தார்.
உலகப் போட்டிக்கு தகுதி
விகாஸ் கிருஷன், சிவா தபா, சுமித் சங்வான், அமித் பன்கல் ஆகிய 4 பேரும் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். இந்த தொடரில் இவர்கள் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டி யில் விளையாட தகுதி பெற்றுள் ளனர்.