

லண்டனில் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றதால் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக ஒலிம்பிக் போட்டிகளிலும் தொடர்கிறார் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்.
சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியின் 38 ஆண்டுகால வரலாற்றில் ஸ்ரீஜேஷ் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டியில் நுழைந்து சாதனை படைத்த தொடரில் ஸ்ரீஜேஷ் கோல்கீப்பராகவும் கேப்டனாகவும் சிறப்பாகச் செயல்பட்டதால் ஹாக்கி இந்தியா ஸ்ரீஜேஷுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் தலைமை தொடரட்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் நட்சத்திர வீரர் ஷாபாஸ் அகமடின் மின்னல் ஆட்டத்தை தற்போது இந்திய அணியில் வெளிப்படுத்தி வரும் எஸ்.வி.சுனில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
சர்தார் சிங்கின் ஆட்டம் சமீபகாலங்களில் சரிவு கண்டு வந்துள்ளது. அவர் தனது வழக்கமான மிட்பீல்டர் பொறுப்பை சமீபமாக சரிவரக் கையாளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. மேலும் பாலியல் புகாரும் அவர் மீது எழுந்துள்ளதால் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவரது செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்திய ஹாக்கி அணி வருமாறு:
பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (கோல்கீப்பர், கேப்டன்), ஹர்மன்ப்ரீத் சிங், ருபீந்தர்பால் சிங், கோதாஜித் சிங், சுரேந்தர் குமார், மன்ப்ரீத் சிங், சர்தார் சிங், வி.ஆர்.ரகுநாத், எஸ்.கே.உத்தப்பா, டேனிஷ் முஜ்தபா, தேவேந்தர் வால்மிகி, எஸ்.வி.சுனில், ஆகாஷ்தீப் சிங். சிங்லென்சனா சிங், ரமந்தீப் சிங், நிகின் திம்மையா.
ஸ்டாண்ட் பை வீரர்கள்: பிரதீப் மோர், விகாஸ் தாஹியா (ரிசர்வ் கோல் கீப்பர்)