

73-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 12-ம் தேதி முதல் 17 வரை மும்பை பாந்த்ராவில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
ஆடவர் உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள சவுரவ் கோஷல் 10 முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென் றுள்ளார். இதேபோல் 10-வது இடத்தில் இருக்கும் வீராங்கனை யான ஜோஸ்னா சின்னப்பா 14 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். தற்போது நடப்பு சாம்பியனாக இருக்கும் இவர்கள் இருவரும் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.
இதேபோல் மற்றொரு முன்னணி வீராங்கனை தீபிகா பல்லிகலும் இந்த தொடரில் கலந்து கொள்கிறார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பின் ஐந்தாண்டுகள் கழித்து தற்போது கலந்து கொள்கிறார். இவர் ஜோஸ்னாவுக்கு கடும் சவாலாக இருப்பார் என கருதப்படுகிறது.
இவர்களுடன் ஹரிந்தர்பால் சிங் சந்து, மகேஷ் மங்கோன்கர், ரவி திக்ஸித், ஆர்யமன் அதிக், விக்ரம் மல்கோத்ரா, வீர் சோட்ரானி, குஷ் குமார், கவுரவ், வேலவன் செந்தில் குமார் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.1.25 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த போட்டி தொடர்பாக கோஷால் கூறும்போது, "தேசிய சாம்பியன்ஷிப் தொடர் மிகவும் மதிப்புமிக்கது. முன்னணி வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு தேசிய பட்டமும் முக்கியமானது தான். இந்த வருடமும் அதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.