Last Updated : 17 May, 2017 03:18 PM

 

Published : 17 May 2017 03:18 PM
Last Updated : 17 May 2017 03:18 PM

ஹேன்சி குரோனியே பந்துவீச்சை வெறுத்த சச்சின் டெண்டுல்கர்

உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்த சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஹேன்சி குரோனியேவின் பந்து வீச்சை எதிர்கொள்வதை தவிர்க்க விரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.

நன்றாக ஆடி வரும் போது ஹேன்சி குரோனியேவின் ஒன்றுமில்லாத பந்துகளுக்கு 6-7 முறையாவது சச்சின் ஆட்டமிழந்திருப்பார், அந்தப் போட்டிகள் ஒருநாள் போட்டிகளாக இருந்தால் இந்திய அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்த சந்தர்ப்பங்களும் உள்ளன.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர் கூறும்போது,

1989 முதல் நான் ஆடத் தொடங்கினேன் அப்போது குறைந்தது 25 உலகத்தரம் வாய்ந்த பவுலர்களாவது இருந்திருப்பார்கள். ஆனால் நான் பேட்டிங் செய்யும் போது எதிர்கொள்ள விரும்பாத ஒரு பவுலர் உண்டென்றால் அது ஹேன்சி குரோனியேதான்.

ஏதோ காரணத்தினால், தவறினால் நான் அவரிடம் திரும்பத் திரும்ப ஆட்டமிழந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் இனி இவர் பந்து வீசினால் ரன்னர் முனையில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

ஹேன்சி குரோனியே பந்து வீச வந்தால், எதிர்முனையில் எந்த பேட்ஸ்மென் இருந்தாலும் சரி, நான் அவரிடம் சென்று ஆலன் டோனல்ட், ஷான் போலாக் வீசட்டும் நான் எதிர்கொள்கிறேன், ஆனால் ஹேன்சி குரோனியே வீசினால் நீங்களே ஆடுங்கள் என்று கூறிவிடுவேன்.

ஸ்டீவ் வாஹ் தலைமை ஆஸி. அணிக்கு புகழாரம்...

என் வாழ்நாளில் நான் எதிர்கொண்ட மிகவும் கடினமான தொடர் என்றால் அது 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடர்தான். 11 வீரர்களில் அப்போது ஆஸ்திரேலியாவில் 7-8 மேட்ச் வின்னர்கள் இருந்தனர், மீதமுள்ள வீரர்களும் அபாரமானவர்கள். இந்த அணிதான் உலகக் கிரிக்கெட்டை நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

அவர்கள் பாணியில் அந்த ஆஸி. வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர்.

எனக்கு இன்னமும் நினைவில் உள்ளது, மெல்போர்ன், அடிலெய்ட், சிட்னி டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் ஆடிய ஆக்ரோஷமான டெஸ்ட் கிரிக்கெட் மொத்தமாக கிரிக்கெட் உலகையே அசத்தியது. அனைவரும் அவர்கள் போன்றே விளையாட விருப்பம் கொண்ட நேரம். நாம் நம் வழியில் ஆடுவதை மதிக்கிறோம் என்றாலும், அந்த ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் சிறப்பு வாய்ந்ததாகும்.

சீராக அவர்கள் வெற்றிகளைக் குவித்தனர், அது ஒரு உலகத்தரம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி.

ஒருநாள் கிரிக்கெட்டையும் டெஸ்ட் கிரிக்கெட்டையும் ஒப்பிட்டால், நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக ஆடும் போது கிடைக்கும் திருப்தி வேறு வடிவங்களில் அவ்வளவாக இருப்பதில்லை.

இவ்வாறு கூறினார் சச்சின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x