சாம்பியன்ஸ் லீக் இறுதிக்கு எளிதில் நுழைந்த கொல்கத்தா

சாம்பியன்ஸ் லீக் இறுதிக்கு எளிதில் நுழைந்த கொல்கத்தா
Updated on
1 min read

சாம்பியன்ஸ் லீக் டி20 முதல் அரையிறுதி ஆட்டத்தில், ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா தகுதி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற ஹோபர்ட் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் ஓவரிலேயே யூசுப் பதானின் ஸ்பின்னுடன் துவக்கியது கொல்கத்தா. அந்த ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே வந்தது. அடுத்து பந்து வீச வந்த ரஸ்ஸல், ஹோபர்ட் துவக்க வீரர் மைக்கலை ஆட்டமிழக்கச் செய்தார்.

அடுத்த ஓவரில் ப்ளிஸ்ஸார்ட் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் விழ, கொல்கத்தாவின் பந்துவீச்சை ஹோபர்ட் அணியால் சமாளிக்க முடியாமல் போனது. 16 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ஹோபர்டுக்கு, அடுத்த சில ஓவர்கள் லாபகரமாக அமைந்தன. முக்கியமாக குல்தீப் யாதவ் வீசிய 19-வது ஓவரில், இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரி உட்பட 21 ரன்களை ஷோயப் மாலிக் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹோபர்ட் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை எடுத்தது.

இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு, முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை அடுத்தடுத்து அடித்து, உத்தப்பா அதிரடி துவக்கத்தைத் தந்தார். காம்பீர் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், தொடர்ந்து வந்த காலிஸ், உத்தப்பாவுடன் இணைந்து ஹோபர்டின் பந்துவீச்சுக்கு பவுண்டரிகளால் பதிலளித்தார்.

8-வது ஓவரில் உத்தப்பா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தி காலிஸுடன் இணைந்த பாண்டே, உத்தப்பா விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். 13-வது ஓவரில் ஹில்ஃபினஸ் வீசிய வைட் பந்தை பாண்டே விரட்டி கேட்ச் கொடுத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நோ-பால் ஆனது.

தொடர்ந்த பாண்டே 32 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த போது லாஃப்லின் பந்தில் வெளியேறினார். மேற்கொண்டு விக்கெட் இழக்காத கொல்கத்தா, எந்தவித தடுமாற்றமும் இன்றி 19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை தொட்டது. காலிஸ் 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சனிக்கிழமை நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில், கொல்கத்தா அணி, சென்னையை சந்திக்கவுள்ளது. சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில், கொல்கத்தா அணி இறுதிக்கு தகுதி பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in