Published : 20 Feb 2014 11:24 AM
Last Updated : 20 Feb 2014 11:24 AM

‘தற்காப்பு’ கேப்டன் தோனியை நீக்க வேண்டும்: முன்னாள் கேப்டன் மொகிந்தர் அமர்நாத் கருத்து

தற்காப்பாக விளையாடும் தோனியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முன்னாள் கேப்டன் மொகிந்தர் அமர்நாத் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் பங்கேற்கும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து படுதோல்வியடைந்து வருகிறது. 2011-ல் இங்கிலாந்து சென்று 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலிலும் 0-4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது.

சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. இதில் 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இப்போது நியூஸிலாந்திலும் 0-1 என்ற கணக்கில் தொடரை இழந் துள்ளது. இப்போட்டிகள் அனைத்திலும் தோனி இந்திய கேப்டனாக இருந்துள்ளார்.

அன்னிய மண்ணில் தோனி தலைமையில் இந்திய அணி 23 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற் றுள்ளது. இதில் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றியாக முடிந்தது. 11 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. 7 போட்டி கள் டிராவில் முடிந்துள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் கேப்டன் மொகிந்தர் அமர்நாத் கூறியிருப்பது:

தோல்வியில் இருந்து அணியைக் காப்பாற்றும் தற்காப்பு முயற்சியில் தோனி அணியை வழி நடத்துகிறார். இதனால்தான் வெளிநாடுகளில் இந்திய அணியால் வெற்றி பெற முடியாமல் போகிறது. உள்நாட்டில் பங்கேற்கும் போட்டிகளில் மட்டும்தான் தோனி கேப்டன் பொறுப்பில் சாதனைகளைப் படைத்துள்ளார். அன்னிய மண்ணில் அவரது தலைமை குறிப்பிடும்படியாக இல்லை.

இந்திய அணிக்கு இப்போது மன்சூர் அலிகான் பட்டோடி போன்ற உத்வேக மிக்க கேப்டன் தான் தேவை. எனவே தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றுதான் நினைக்கிறேன். கேப்டனாக இருப்பவர் முன்வரிசையில் களமிறங்கி அணிக்கு தலைமை வகிக்க வேண்டும். எந்த கிரிக்கெட் அணியிலும் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருப்பவர் 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்குவது இல்லை. இதில் எந்த வகையான முன்னுதாரணத்தை உருவாக்க தோனி முயற்சிக்கிறார் என்பது தெரியவில்லை என்றார் அமர்நாத்.

கோலியை கேப்டனாக்க வேண்டும்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அடுத்து யாரை நியமிக்கலாம் என்று அமர்நாத் திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, இப்போதைய நிலையில் விராட் கோலி கேப்டனாக பொருத்தமான நபராக இருக்கிறார். கவுதம் கம்பீரும் கேப்டன் பதவிக்கான அனுபவம் உடையவர்தான். எனினும் இப்போதைய சூழ்நிலையில் அவர் அணியிலேயே இல்லை. எனவே கோலி மட்டும்தான் ஒரே தகுதியான நபர். தனது தலைமைப் பண்பை அவர் பல்வேறு சூழ்நிலைகளில் நிரூபித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் தோனி தலைமையில் இந்திய அணி சிறப்பாகவே உள்ளது. எனவே அதில் கேப்டனை மாற்ற வேண்டிய தேவையில்லை. டெஸ்ட், ஒருநாள், டி20 என ஒவ்வொரு போட்டிக்கும் வெவ்வேறு கேப்டன்களை நியிமித்தால் சிறப்பாக இருக்கும்.

இந்திய பயிற்சியாளர் வேண்டும்

இந்திய அணியின் இப்போ தைய பயிற்சியாளராக உள்ள பிளெட்டர் அணிக்காக எந்த மாதிரியான பணியைச் செய்கிறார் என்பதே தெரியவில்லை. அவரால் அணிக்கு என்ன பயன் கிடைத்துள்ளது. இந்திய அணி தோல்வியடையும்போது அனைவரும் கேப்டனையும் அணி வீரர்களையும் அதிகம் குறை கூறுகிறோம். பயிற்சியாளர் மற்றும் அணியின் பிற பணியாளர்களை அதற்கு சிறிதும் பொறுப்பாக்குவது இல்லை.

இந்திய அணிக்கு இந்தியர் ஒருவரை பயிற்சியாளராக்க வேண்டும். களத்தில் வீரர்கள் தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் தயார் செய்தவதே பயிற்சியாளர் மற்றும் அணியின் இதர பணியாளர்களின் முக்கியப் பணி. நமது அணி வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள்தான்.

ஆனால் களத்தில் நமது வீரர்களின் முழுத்திறமையும் வெளிப்படாததற்கு யார் பொறுப்பு? இதற்கு முன்பு நமது அணிக்கு பயிற்சியாளராக இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், பல சாதனைகளுக்கு காரணமாக இருந்துள்ளனர் என்றார் அமர்நாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x