

மே.இ.தீவுகள் என்ற அனுபவமற்ற, மாற்றத்தில் இருக்கும் அணிக்கு எதிரான வெற்றியைப் பெரிதும் விதந்தோத எதுவுமில்லாவிட்டாலும், ஒரு கேப்டனாக விராட் கோலி வெற்றிகுறித்து உற்சாகம் காட்டியுள்ளார்.
2-வது போட்டி வெற்றிக்குப் பிறகு அவர் கூறியதாவது:
“இது ஒரு முழுநிறைவான ஆட்டம். ரஹானே, தவண் கூட்டணி தனித்துவமானது. பிறகு கடைசியில் என்னுடைய பங்களிப்பு, யுவி, தோனி, கேதார் ஜாதவ் ஆகியோரும் சிறிய அளவில் முக்கியப் பங்களிப்பு, புவனேஷ் குமாரின்பந்து வீச்சு, அறிமுக வீரர் குல்தீப் யாதவ்வின் பவுலிங் என்று முழுநிறைவான ஆட்டமாக அமைந்தது. முதல் முறையாக குல்தீப் பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது.
அணியில் பெஞ்ச் ஸ்ட்ரெந்த் நன்றாக உள்ளது. ரஹானேவுக்கு சாம்பியன்ஸ் டிராபியில் துரதிர்ஷ்டவசமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர் தனது மனவலிமையைக் காட்டியுள்ளார். உள்ளே வந்து ரன்களை குவிக்கிறார்.
புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது பற்றி நாங்கள் கூடி ஆலோசனை மேற்கொள்வோம் (ரிஷப் பந்த் வாய்ப்பு பற்றி கேட்டபோது), ஆண்டிகுவா சென்று ஆலோச்னை செய்து சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுப்போம்” என்றார்.