

வங்கதேசத்தின் மிர்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தைத் தோற்கடித்தது பாகிஸ்தான்.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் 7 ரன்களிலும், மார்ட்டின் கப்டில் 11 ரன்களிலும் ஆட்டமிழக்க, அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. ஒருபுறம் கேப்டன் மெக்கல்லம் அதிரடியாக ரன் சேர்த்தபோதிலும், மறுமுனையில் வேகமாக சரிந்தது.
மெக்கல்லம் 45 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. மெக்கல்லமுக்கு அடுத்தபடியாக காலின் மன்றோ 15 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் உமர் குல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் ஷர்ஜீல் கான் 12 ரன்களில் ஆட்டமிழக்க, கம்ரன் அக்மலுடன் இணைந்தார் கேப்டன் முகமது ஹபீஸ். இந்த ஜோடி வெளுத்து வாங்கியது. ஹபீஸ் 43 ரன்களில் இருந்தபோது நீஷம் பந்துவீச்சில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசி 35 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
அவரைத் தொடர்ந்து 44 பந்துகளில் அரைசதம் கண்ட கம்ரன் அக்மல் 52 ரன்கள் எடுத்திருந்தபோது மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து ஹபீஸ் 39 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த உமர் அக்மல் 3 ரன்களில் வெளியேற, சோயிப் மாலிக்கும் சோயிப் மசூத்தும் இணைந்து பாகிஸ்தானுக்கு வெற்றித் தேடித்தந்தனர். அந்த அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
அயர்லாந்து த்ரில் வெற்றி
வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியில் கேப்டன் டெய்லர் 46 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
பின்னர் பேட் செய்த அயர்லாந்து அணிக்கு கேப்டன் போர்ட்பீல்டு-ஸ்டிர்லிங் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவர்களில் 80 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கம் ஏற்படுத்தியது. போர்ட்பீல்டு 31 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்டிர்லிங் 34 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், “பை” மூலம் ஒரு ரன் எடுத்தது. இதன்மூலம் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது அயர்லாந்து.
இன்றைய ஆட்டங்கள்
முதல் சுற்று
ஆப்கானிஸ்தான்-ஹாங்காங், நேரம்: பிற்பகல் 3
வங்கதேசம்-நேபாளம், நேரம்: இரவு 7
இடம்: சிட்டகாங்
பயிற்சி ஆட்டங்கள்
இங்கிலாந்து-மே.இ.தீவுகள், நேரம்: பிற்பகல் 3
வங்கதேசம் (ஏ) - தென் ஆப்பிரிக்கா, நேரம்: இரவு 7
இடம்: பதுல்லா