

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு தங்களது பரிந்துரைகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த பரிந்துரைகளை அமல் படுத்துவதில் பிசிசிஐ தயக்கம் காட்டி வந்தது.
இந்நிலையில் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை பிசிசிஐ அவமதித்து வருகிறது. இதனால் பிசிசிஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக பொறுப்பில் இருந்து அனுராக் தாகூர், அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கி விட்டு வேறு நபர்களை பொறுப்பில் அமர்த்தி பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோதா குழு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
இந்த வழக்கு புதனன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. லோதா குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிசிசிஐ கட்டுப்பட மறுக்கிறது. லோதா குழுவினர் தொடர்ந்து அனுப்பிய கடிதங்கள், இ-மெயில்களுக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து பதில்கள் வருவதில்லை" என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், "நீதிமன்ற உத்தரவை பிசிசிஐ மீறுவதை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது. நாங்கள் தான் சட்டம் என்று பிசிசிஐ நினைத்துக்கொண்டால் அது தவறானது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிசிசிஐ கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
நீங்கள் (பிசிசிஐ) கடவுள் போன்று நடந்துகொள்கிறீர்கள். உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க தவறுவதன் மூலம் அவமதிப்பையும் ஏற்படுத்தி வருகிறீர்கள். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். இல்லையென்றால் கட்டுப்பட வைக்க வேண்டியிருக்கும்" என எச்சரித்தார்.
பிசிசிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தடார் கூறும்போது, "உச்ச நீதிமன்றத்தின் பெரும்பாலான உத்தரவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட்டே வந்துள்ளோம்ஞ என்று தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டத்தை மீறக்கூடாது. தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் மகிழ்ச்சியானதாக இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நீங்கள் கட்டுப்பட்டே தீர வேண்டும் என்றனர்.
வரும் 6-ம் தேதிக்குள் லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிசிசிஐ தரப்பில் அறிக்கை அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.