சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி ஃபார்முக்கு வந்து விடுவார்: கபில் தேவ் நம்பிக்கை

சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி ஃபார்முக்கு வந்து விடுவார்: கபில் தேவ் நம்பிக்கை
Updated on
2 min read

ஐபிஎல் தொடரில் விராட் கோலி சோபிக்காததையடுத்து சாம்பியன்ஸ் டிராபியில் அவரது பார்ம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட, பதில் அளித்த கபில், விராட் கோலி நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பார்முக்கு வந்து விடுவார் என்றார்.

ஸ்டார்ஸ்போர்ட்ஸ்-ஹாட்ஸ்டார் ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற கபில் தேவ் கூறியதாவது:

கோலி ஃபார்ம் பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை, எனக்கு அவரது திறமை பற்றி நன்றாகத் தெரியும், நிச்சயம் அவர் எழுச்சி பெறுவார். அவர் ரன்கள் எடுக்க மாட்டர் என்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை.

அவர் அணிக்கு ஒரு முக்கியமான வீரர் அவர் ரன்கள் எடுக்கத் தொடங்கினால் ஒட்டுமொத்த அணியும் உத்வேகம் பெறும், அதே போல் கேப்டன் ரன்குவிக்கும் போது, அதைவிட அணிக்கு சிறந்தது வேறு என்ன வேண்டும், என்றார் கபில்.

கடந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 973 ரன்கள் விளாசிய விராட் கோலி, இந்த ஐபில் தொடரில் 10 ஆட்டங்களில் வெறும் 308 ரன்களையே எடுத்து சோபிக்காமல் போனார்.

பும்ரா திறமை குறித்து கபில்...

முதன் முதலாக நான் பும்ரா பந்து வீசிப் பார்த்த போது, அவர் இவ்வளவு வேகமாக வளர்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரிடம் அவ்வளவு மனோவலிமை உள்ளது. அவரது பந்து வீச்சு ஆக்‌ஷன் வழக்கத்துக்கு மாறானதாக இருக்கும் போது சீராக திசை மற்றும் அளவை பராமரிக்க முடியாது. ஆனால் அவரது மனோவலிமை அபாரம், அவரிடம் நல்ல யார்க்கர்கள் உள்ளன.

நான் அவரை முதன் முதலில் ஒருநாள் போட்டியில் பார்த்த போது எனக்கு அவர் மீதிருந்த மதிப்பை விட தற்போது அவர் மீது மதிப்பு கூடியுள்ளது

சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை இந்திய அணியிடம் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சு உள்ளது, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், ஷமி, அஸ்வின், ஜடேஜா நம் அணிக்குக் கிடைத்த மிகச்சிறந்த பவுலர்கள் இவர்கள்.

பேப்பரில் இந்திய அணி வலுவாக உள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும் மற்ற அணிகளை விட இந்திய அணி வலுவாக உள்ளதாகவே நான் நினைக்கிறேன். இந்த நிலையில் இந்திய அணி நல்ல நிலையில் இருப்பதாகவே கருதுகிறேன்.

அஜிங்கிய ரஹானே ஓவ்வொரு முறையும் பெரிய அளவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான தகுதியும் திறமையும் உள்ளவர் என்பதை நிரூபித்து வருகிறார். சில வேளைகளில் ஒரு நல்ல இன்னிங்ஸ் ஒருவரது எண்ணத்தை மாற்றி விடும், நேற்றைய அரைசதத்திற்குப் பிறகு அவர் தன்னம்பிக்கை பெற்றிருப்பார் என்றே நினைக்கிறேன்.

அதே போல் அணியில் தோனி, யுவராஜ் சிங் ஆகியோருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல மரியாதை இருக்கிறது. ஆனால் தோனியும், யுவராஜ் சிங்கும் பழைய நிலைமையில் வைத்து நாம் பார்க்கக் கூடாது, அவர்களது அனுபவமே அணிக்குத் தற்போது கூடுதல் பலம்

முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறோம், இப்போதைக்கு இந்திய அணிக்கே வாய்ப்பு அதிகம் பாகிஸ்தான் அணி பலவீனமாகவே உள்ளது, மேலும் இந்திய அணி தற்போது வலுவாக உள்ளது.

ஆனால் ஒருவிஷயத்தைக் கவனத்தில் கொள்வது நல்லது, பாகிஸ்தானுக்கு தோல்வி பெரிதாக பாதிப்பு ஏற்படுத்தாது, அதுதான் அந்த அணிக்கு எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது, தோல்வி பற்றிய பயம் இன்றி அவர்கள் ஆடும்போது அந்த அணி அபாயகரமான அணி, ஆனால் இப்பொதைக்கு அவர்கள் ‘அண்டர்டாக்ஸ்’ என்றே கருதுகிறேன். அவர்களிடமும் சில அதிரரி வீரர்கள் உள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இந்தப் போட்டியில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இவ்வாறு கூறினார் கபில்தேவ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in