

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறார் இந்தியாவின் விராட் கோலி.
இப்போது முதலிடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸுக்கும் கோலிக்கும் இடையே 2 தரவரிசைப் புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.
அடுத்து வரும் ஒருநாள் போட்டிகளில் கோலி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் விரைவிலேயே முதலிடத்தைப் பிடிப்பார்
நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியைச் சந்தித்தாலும், கோலி சிறப்பாக விளையாடி 291 ரன்களை எடுத்தார். இதன் மூலம் இப்போது வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் தரவரிசை பட்டியலில் கோலிக்கு கூடுதலாக 11 தரவரிசை புள்ளிகள் கிடைத்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் கேப்டன் தோனி 6-வது இடத்தில் உள்ளார். கோலிக்கு அடுத்தபடியாக 10 பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றொரு இந்திய வீரர் தோனி மட்டும்தான்.
நியூஸிலாந்துக்கு எதிராக சரியாக விளையாடாததால் தரவரிசையில் பின்னடவைச் சந்தித்துள்ள ஷீகர் தவண் 11-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா 3 இடங்கள் பின்தங்கிய 9-வது இடத்துக்கு வந்துள்ளார். பந்து வீச்சில் முதல் 10 இடத்துக்குள் வந்துள்ள ஒரே இந்திய வீரர் ஜடேஜா மட்டும்தான்.
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ராஸ் டெய்லர், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் 361 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து பேட்ஸ்மேன் வில்லியம்சன் 20 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை ஷீகர் தவணுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். தரவரிசையில் அவரது அதிகபட்ச முன்னேற்றமும் இதுதான். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஜார்ஜ் பெய்லி 3-வது இடத்தில் உள்ளார்.-பி.டி.ஐ.