

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட தொடரில் சிறப்பாக விளையாடியதன் பலனாக, அவர் இந்த உச்சத்தை எட்டியிருக்கிறார்.
இதன் மூலம், ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடம் வகித்த இந்திய அணியைச் சேர்ந்தவர்களில், சச்சின் மற்றும் தோனிக்கு அடுத்து விராட் கோலி மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெருகிறார்.
முதலிடத்தில் உள்ள கோலி, இரண்டாம் இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் ஆம்லாவைக் காட்டிலும் 13 தரநிலைப் புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர் ஷிகார் தவாண் 12 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த தரவரிசையில் தோனி 6-வது இடத்திலும், ரோஹித் ஷர்மா 15-வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 19-வது இடத்திலும் உள்ளனர்.
ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலின் முதல் 20 இடங்களில், 5 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.