Last Updated : 28 Oct, 2015 05:20 PM

 

Published : 28 Oct 2015 05:20 PM
Last Updated : 28 Oct 2015 05:20 PM

டெஸ்ட் போட்டிகளில் இந்தியப் பந்துவீச்சு தெ.ஆ.-வை விட சற்றே வலுமிக்கது: ஸ்ரீநாத்

வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு இரண்டும் சமவிகிதத்தில் கலந்துள்ள அணியாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி திகழ்வதால் வரவிருக்கும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு சற்றே கூடுதலாக உள்ளது என்று ஜவகல் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “இசாந்த் சர்மா இந்தியப் பந்துவீச்சின் எதிர்காலம்” என்றார்.

"மொஹாலி டெஸ்ட் போட்டியில் இசாந்த் இல்லாதது சற்றே இந்திய அணிக்கு கடினம்தான். ஆனால் அவர்தான் இந்திய பந்துவீச்சின் எதிர்காலத் தலைமை, அவர் இன்னும் கூடுதல் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் திறன்கள் புதைந்து கிடக்கின்றன.

இந்திய அணியில் எப்போதுமே வேகப்பந்து, சுழற்பந்து வீச்சு என்ற சேர்க்கை சிறப்பாக அமைகிறது. உள்நாட்டில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் பங்கு உள்ளது. வேகம்-ஸ்பின் இணை 50-50 என்று கூற முடியாவிட்டாலும், எதிரணியினரின் விக்கெட்டுகளில் 40% வேகப்பந்து வீச்சுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதனுடன் ஸ்பின்னும் சேரும்போது, டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் இந்திய அணிக்கு சற்றே வாய்ப்புகளை பிரகாசமாக்குகிறது.

யாதவ், வருண் ஆரோன் ஆகியோர் ஒரேமாதிரியான பவுலர்களே. ஆனால் கேப்டனின் உள்ளுணர்வு எப்படி தீர்மானிக்கிறதோ அப்படி முடிவெடுப்பதுதான் சிறந்தது. வலைப்பயிற்சியில் சிறப்பாக வீசுபவர்கள் அல்லது சரியான இடங்களில் பந்தை பிட்ச் செய்வதில் சீராக இருக்கும் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று கருதுகிறேன்.

புவனேஷ் குமாரின் பலம் அவரது துல்லியம். அவர் புத்திகூர்மை மிக்க பவுலர், அவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலராக இல்லாவிட்டாலும் 3-வது வீச்சாளராக அவர் இயங்க முடியும்.

மொஹாலி டெஸ்ட் போட்டியில் முதல் 2 நாள் ஆட்டத்தைப் பொறுத்துதான் கணிக்க முடியும். பனிப்பொழிவு தாக்கம் ஏற்படுத்துமா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இசாந்த் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போனது பின்னடைவுதான் என்றாலும் மொஹாலியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது என்றே கூறுவேன்" இவ்வாறு கூறினார் ஜவகல் ஸ்ரீநாத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x