

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஏஞ்சலிக் கெர்பர், ரோஜர் பெடரர் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 17-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 10-ம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் பெர்ட்டிச்சை எதிர்த்து விளையாடினார். இதில் பெடரர் 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
4-ம் நிலை வீரரான சுவிட்சர் லாந்தின் வாவ்ரிங்கா 3-6, 6-2, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் 29-ம் நிலை வீரரான செர்பியாவின் விக்டர் டிரோசிக்கையும், 12-ம் நிலை வீரரான பிரான்சின் சோங்கா 7-6, 7-5, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் 23-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜேக் சோக்கை யும், 5-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷி கோரி 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் சுலோவேக்கியாவின் லூக்காஸ் லக்கோவையும் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-0, 6-4 என்ற நேர் செட்டில் எளிதாக செக் குடியரசின் கிறிஸ்டியானா பிளிஸ்கோவாவை வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தார். 13-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-1, 6-0 என்ற நேர் செட்டில் சீனாவின் யிங் யிங் டுஅனை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 6-4, 6-2 என்ற நேர் செட்டில் 32-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் அனஸ்டசிஜா செவஸ்டோவாவை வீழ்த்தினார்.
மகளிர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா ஜோடி 6-1, 6-4 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், சீனாவின் ஷாய் ஹெங் ஜோடியை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறியது.
போபண்ணா ஜோடி தோல்வி
ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, உருகுவேயின் பப்லோ குயவாஸ் ஜோடி 6-2, 6-7, 4-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போல்ட், பிராட்லே மவுஸ்லி ஜோடியிடம் தோல்வியடைந்தது.