

விளையாட்டு போட்டிகளின் ஆஸ்கர் விருது என அழைக்கப்படும் லாரஸ் உலக விருதுகள் வழங்கும் விழா மொனாக்கோவில் நேற்று நடைபெற்றது. இதில் ஆண்டின் சிறந்த வீரர் விருது ஜமைக்காக தடகள வீரரான உசேன் போல்ட் டுக்கு வழங்கப்பட்டது. அவர் ரியோ ஒலிம்பிக்கில் 3 தங்கப் பதக்கங்கள் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாரஸ் விருதை உசேன் போல்ட் வெல்வது இது 4-வது முறையாகும். இதற்கு முன்னர் அவர் கடந்த 2009, 2010 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் இந்த விருதை வென்றிருந்தார். இதன் மூலம் அதிக முறை இந்த விருதை கைப்பற்றிய டென்னிஸ் நட்சத்திரமான சுவிட்சர்லாந்தின் ரோஜடர் பெடரர், செரீனா வில்லியம்ஸ், கெலி ஸ்லாட்டர் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்.
புகழ்பெற்ற அமெரிக்க தடகள வீரரான மைக்கேல் ஜான்சனிடம் இருந்து விருதை பெற்றுக்கொண்ட உசேன் போல்ட் கூறும்போது,
‘‘நான் உங்களின் சாதனையை முறியடித்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அற்புத மான இந்த விருதை எனக்கு வழங்கி யதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
லாரஸ் எனக்கு மிகப்பெரிய விருதாகும். இதை நான் 4-வது முறையாக பெறுகிறேன். இதன் மூலம் சிறந்த வீரர்களான பெடரர் உள்ளிட்டோரின் சாதனையை சமன் செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.
சிறந்த வீராங்கனை விருதை அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பைல்ஸ் தட்டிச்சென்றார். அவர் ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம், ஒரு வெண் கலப் பதக்கம் வென்றிருந்தார்.
விருது வென்ற அவர் கூறும்போது,“பேசுவதற்கு எனக்கு வார்த்தைகளே இல்லை. இந்த விருதை இளவரசர் ஆல்பர்ட் மற்றும் பல ஆண்டுகளாக நான் பார்த்து வரும் ருமேனியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாதியா மோமநேசி ஆகியோரிடம் இருந்து பெற்றதை பெருமையாக கருதுகிறேன். இந்த விருது எனக்கு மட்டும் கிடைத்ததாக நான் கருதவில்லை. இந்தப் பிரிவில் தேர்வாகியிருந்த அனைவருக்கும் கிடைத்ததாகவே உணர்கிறேன்’’ என்றார்.
ஓய்வுக்கு பின்னர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்கி சாதனை படைத்த வீரருக்கான விருது அமெரிக்க நீச்சல் மன்னன் மைக்கேல் பெல்ப்ஸூக்கு வழங்கப்பட்டது.
2012 ஒலிம்பிக்கில் ஓய்வு பெற்ற அவர் கடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் மீண்டும் கலந்துகொண்டு 5 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பெல்ப்ஸ் கூறும்போது, “எனது வாழ்க்கையை திரும்பி பார்த்தால், ரியோ ஒலிம்பிக்தான் நான் பங்கேற்ற போட்டிகளிலேயே மிகச் சிறந்ததாக கருதுவேன்’’ என்றார்.
திருப்புமுனையை ஏற்படுத்திய வீரர் விருதை பார்முலா ஒன் சாம்பியனான ஜெர்மனியின் நிக்கோ ரோஸ்பெர்க் பெற்றார். 2014 மற்றும் 2015-ம் ஆண்டு போட்டிகளில் 2-ம் இடம் பிடித்த அவர் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஸ்பெர்க் கூறும்போது, “விளையாட்டின் ஆஸ்கராக கருதப்படும் இந்த விருதை வென்றதில் உண்மையாகவே மகிழ்ச்சியடைகிறேன். அபுதாபி பந்தயத்தின் கடைசி இரண்டு சுற்றுகள் எனது கார்பந்தய வாழ்க் கையின் மிக உணர்வுப்பூர்வமான தருணங்களாக இருந்தது’’ என்றார்.
மாற்று திறனாளி பிரிவில் சிறந்த வீரர் விருது சக்கர நாற்காலி கத்தி சண்டை வீரரான இத்தாலியின் பீட்ரைஸ் வியோவுக்கும், விளை யாட்டு உத்வேக விருது ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அகதிகள் அணிக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த விளையாட்டுக்கான விருது
‘மாற்றத்துக்கான அலைகள்’ என்ற திட்டத்துக்கு வழங்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவை மையமாக வைத்து செயல்படும் இந்தத் திட்டமானது, சமூக வன்முறை களால் பாதிக்கப்படும் இளம் வயதினரை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்து நல்வழிப்படுத்துவதே ஆகும்.
ஆண்டின் அதிரடி வீரர் விருது இங்கிலாந்தை சேர்ந்த ரேச்சல் ஆதர்டனுக்கு வழங்கப்பட்டது. இவர் மலைப்பகுதிகளில் சிறப்பாக செயல்படும் பைக் பந்தய வீராங்கனை ஆவார். ஸ்பிரிட் ஆப் ஸ்போர்ட்ஸ் விருது இங்கிலாந்து கால்பந்து பிரிமீயர் லீக்கில் பட்டம் வென்ற லெய்செஸ்டர் சிட்டி அணிக்கு வழங்கப்பட்டது.
ஆண்டின் சிறந்த அணிக்கான விருதை உலக பேஸ்பால் தொடரில் 108 ஆண்டுகளுக்கு பிறகு பட்டம் வென்ற சிக்காகோ கப்ஸ் அணி பெற்றது. இந்த ஆண்டு முதன்முறையாக
‘சிறந்த விளையாட்டு தருணம்’ என்ற பிரிவில் விருது வழங்கப் பட்டது. இந்த விருதுக்கு முதன் றையாக ரசிகர்களும் தங்களது குரல்களை பதிவு செய்திருந் தனர். முதல்முறையாக அறிமுகப் படுத்தப்பட்ட இந்த விருதினை பார்சிலோன கால்பந்து அணியின் 12-வது வயதுக்கு உட்பட்டோருக் கான அணி வென்றது.