Last Updated : 14 Feb, 2017 04:07 PM

 

Published : 14 Feb 2017 04:07 PM
Last Updated : 14 Feb 2017 04:07 PM

டெஸ்ட் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியைச் சாதிக்க வந்திருக்கிறோம்: ஆஸி.கேப்டன் ஸ்மித்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியைச் சாதிக்க வந்திருப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் ஸ்மித் கூறியதாவது:

இந்தியாவில் விளையாடுவது மிகப்பெரிய சவால், நாங்கள் இங்கு தொடரை வெல்வோமானால் 10-20 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் வாழ்க்கையின் சிறந்த காலக்கட்டம் இந்தத் தொடரை வென்ற காலக்கட்டமாகவே நினைத்துப் பார்த்து மகிழ்வோம், டெஸ்ட் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு வெற்றியைச் சாதிக்கவே இங்கு வந்திருக்கிறோம், ஆனால் இது அவ்வளவு சுலபமல்ல என்பதையும் நன்றாக அறிந்துள்ளோம்.

அடுத்த 6 வாரங்களுக்கு நடக்கவிருப்பதை எண்ணி நாங்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளோம். வெற்றிகளை விட தோல்விகளிலிருந்தே நாம் பாடம் கற்றுக் கொள்ள முடியும். நாங்களும் நிறைய கற்று வருகிறோம். கடின உழைப்பை இட்டு எங்களின் சிறந்த திறமைகளை பாடுபட்டு வெளியே கொண்டு வரக் காத்திருக்கிறோம். தற்போது அணி இருக்கும் நிலை குறித்து திருப்தி ஏற்பட்டுள்ளது.

என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் போட்டி என்பது அது நடைபெறும் காலத்தின் பல்வேறு தருணங்களைப் புரிந்து கொள்வது என்பதுதான். ஆட்டத்தில் சில வேளைகளில் தாக்குதல் ஆட்டம் ஆட வேண்டி வரும், சில வேளைகளில் தடுப்பாட்ட உத்தி கைகொடுக்கும்.

இந்தியாவில் விளையாடுவதென்பது இத்தகைய கணங்களை எப்படி நாம் அணுகுகிறோம் என்பதைப் பொறுத்ததே கேப்டன்சிக்கு விடுக்கப்படும் சவாலாகும். இலங்கையில் இது குறித்து நான் சிறிதளவு கற்றேன். வீரர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்றே நான் நினைக்கிறேன். தடுப்பாட்டம்தான் ஆட வேண்டும் என்று முன் கூட்டியே தீர்மானிப்பதுதான் பிரச்சினையின் ஆரம்பம். ரன்கள் எடுப்பதையே குறிக்கோளாக வைத்திருக்க வேண்டும், அதே வேளையில் இந்திய ஸ்பின் பவுலர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல் நன்றாக ஸ்விங், ரிவர்ஸ் செய்யும் புதிய இந்திய வேகப்பந்து வீச்சுக்கு எதிராகவும் நம் தடுப்பாட்டம் கூர்மையடைய வேண்டும் என்றே கருதுகிறேன். இந்தத் தொடரில் தடுப்பாட்டம் பெரிய பங்களிப்பு செய்யும் என்றெ நான் நினைக்கிறேன்.

எங்களிடம் நல்ல வேக, சுழல் கலவை உள்ளது. இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக குறிப்பாக விராட் கோலிக்கு எதிராக சில உத்திகளை திட்டமிட்டுள்ளோம், அது என்ன என்பதை நான் கூறப்போவதில்லை, இந்தியாவின் டாப் 6 வீரர்கள் அருமையாக ஆடி வருகிறார்கள். எனவே இவர்களை நிறுத்துவதற்கான உத்திகளை வகுத்துள்ளோம். அது போலவே அஸ்வின் உலகின் தலை சிறந்த பவுலராக இருந்து வருகிறார், அவரை இந்த சூழலில் ஆடுவது கடினமே, ஆனாலும் இவருக்கு எதிராகவும் பேட்டிங் உத்திகளை வகுத்துள்ளோம்.

நாங்கள் துபாயில் இதே போன்ற பிட்ச்களில் ஆடி பயிற்சி பெற்றுள்ளோம் எனவே இந்தியத் தொடருக்கு தயாராக இருக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் என்பது நல்ல முடிவை எடுத்து அதனைச் செயல்படுத்துவதாகும். இதனை நீண்ட நேரத்துக்குக் கடைபிடிக்க வேண்டும். துபாயில் பந்துகள் நன்றாகத் திரும்பின கணிக்க முடியாத பவுன்சும் இருந்தது.

இந்தியத் தொடர் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய சோதனையாகவும் உற்சாகமூட்டும் அனுபவமாகவும் இருக்கும் என்றே கருதுகிறேன்.

இவ்வாறு கூறினார் ஸ்மித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x