ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரருக்கும் திட்டம் வைத்துள்ளோம்: அஜிங்கிய ரஹானே

ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரருக்கும் திட்டம் வைத்துள்ளோம்: அஜிங்கிய ரஹானே
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆக்ரோஷமாக ஆடுவோம் என்று கூறும் இந்திய வீரர் ரஹானே, ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரருக்கு எதிராக திட்டம் தீட்டியுள்ளோம் என்றார்.

புனேயில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஹானே கூறியதாவது:

அவர்கள் வசையில் இறங்குவார்களா இல்லையா என்பதை பற்றி எங்களுக்குத் தெரியாது, அந்த அணியின் ஒவ்வொரு வீரருக்கு எதிராகவும் திட்டம் தீட்டியுள்ளோம். திறமை வழி, ஸ்லெட்ஜிங் வழி என்று நிச்சயமான திட்டம் கைவசம் உள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் உளவியல் ரீதியான உத்தியில் ஈடுபடுவார்கள் என்பது தெரியும், எங்களைப் பொறுத்தவரையில் அவர்களை ஆதிக்கம் செலுத்துவதே இலக்கு.

நாங்கள் ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தை அவர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டுமல்ல அனைத்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் காட்டுவோம். பயிற்சி ஆட்டமும் டெஸ்ட் போட்டியும் முற்றிலும் வேறுபட்டவை. சூழ்நிலைக்கேற்ப ஆட வேண்டும்.

அவர்கள் பந்துகள் திரும்பும் பிட்ச்களை எதிர் நோக்கி வருகின்றனர். 3 வேகப்பந்து வீச்சாளர்கள் 5 ஸ்பின்னர்களை அணியில் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் அணிச்சேர்க்கையப் பற்றி கவலைப்படுவதை விடுத்து நம் அணியின் திறமை என்னவென்பதில் கவனம் செலுத்துவோம்.

இந்தப் பிட்ச் வித்தியாசமானது, எனவே முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகுதான் பார்க்க வேண்டும். எந்த வடிவத்தில் ஆடினார்லும் அணிக்கு எங்களில் சிறந்தவற்றை வழங்குவதே சிந்தனையாக இருப்பதால் வடிவ வித்தியாசம் ஒரு விஷயமல்ல. உத்தி ரீதியாக ஒன்றுமில்லை, மனரீதியானதுதான் இது.

வங்கதேசத்துக்கு எதிரான அந்த இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானது. 2 மாதங்களுக்குப் பிறகு இறங்கி 82 ரன்கள் எடுத்தேன். ஆனால் இந்தத் தொடரில் மீண்டும் புதிதாகத்தான் தொடங்க வேண்டும். ஏனெனில் ஆஸ்திரேலிய அணி எப்படிப்பட்டது என்பதை அறிவோம்.

முதல் போட்டியில் உத்வேகம் பெறுமாறு ஆடிவிட்டால் அந்த உத்வேகத்தை அப்படியே தொடர் முழுதும் சுமந்து செல்ல வேண்டியதுதான்.

இவ்வாறு கூறினார் ரஹானே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in