முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன் சதம்; வார்னர் சாதனை: ரன்குவிப்பில் ஆஸ்திரேலியா

முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன் சதம்; வார்னர் சாதனை: ரன்குவிப்பில் ஆஸ்திரேலியா
Updated on
2 min read

சிட்னியில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளைக்கு முன்னதாகவே சதம் அடித்து சாதனை நிகழ்த்தினார் டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 365 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. டேவிட் வார்னர் உணவு இடைவேளைக்கு முன் 78 பந்துகளில் சதம் கண்டு சாதனை நிகழ்த்தியுள்ளார். அதாவது 87 ஆண்டுகளுக்கு முன் டான் பிராட்மேன் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் கண்டார். 1930-ம் ஆண்டு தனது அதிகபட்ச ஸ்கோரான 334 ரன்களை எட்டிய இன்னிங்ஸில் பிராட்மேன் உணவு இடைவேளைக்கு முன் 105 ரன்கள் விளாசினார். 1902-ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ட்ரம்பர் என்பவர் உணவு இடைவேளைக்கு முன் 103 ரன்களையும் 1926-ம் ஆண்டு லீட்ஸில் ஆஸி.வீரர் மெக்கார்ட்னி உணவு இடைவேளைக்கு முன் 112 ரன்களையும் எடுத்ததையடுத்து அந்த சிறப்புக் குழுவில் வார்னர் இணைந்துள்ளார்.

கடைசியாக உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்த வீரர் என்றால் பாகிஸ்தானின் தொடக்க வீரர் மாஜித் கானைக் குறிப்பிடலாம், இவர் நியூஸிலாந்துக்கு எதிராக 1976-77-ல் இதேசாதனையை நிகழ்த்தினார். ஒருமுறை சேவாக் உணவு இடைவேளைக்கு முன் முதல்நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகளில் சதம் எடுக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார், சேவாக் 99 ரன்களை எடுத்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

வார்னர் இதற்கு முன்பாக இந்தியாவுக்கு எதிராக 69 பந்துகளில் சதமடித்ததுதான் அவரது விரைவு டெஸ்ட் சதமாகும், பிறகு மே.இ.தீவுகளுக்கு எதிராக வார்னர் 82 பந்துகளில் இதே சிட்னியில் சதம் கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இன்று வார்னர் அடித்தது அவரது 18-வது டெஸ்ட் சதமாகும்.

‘பிளே’ என்று நடுவர் கூறியவுடன் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார் வார்னர், 6 ஓவர்கள் முடிவில் 8 பவுண்டரிகளை வெளுத்துக் கட்டியிருந்தார் வார்னர். 42 பந்துகளில் அரைசதம் கடந்தார். பிறகு தனது 78-வது பந்தை பாயிண்டில் திருப்பி விட்டு சாதனை சதம் கண்டார். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியாவின் 126/0-வில் வார்னர் 100 ரன்கள் என்று இருந்தார். உணவு இடைவேளை முடிந்து 95பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்த வார்னர் மட்டை விளிம்பில் பட்டுச் செல்லுமாறு அயராத ஆற்றல் நிரம்பிய வஹாப் ரியாஸ் ஒரு பந்தை வீச, சர்பராசிடம் கேட்ச் ஆனது. புல்ஷாட்கள், பேக்ஃபுட் பஞ்ச் என்று அவர் ஆதிக்கம் செலுத்தியது பாகிஸ்தான் பவுலர்கள் வீசிய ஷார்ட் பிட்ச் லெந்தை அறிவுறுத்துகிறது. தற்போது வார்னர் 60 டெஸ்ட் போட்டிகளில் 49 ரன்கள் சராசரியுடன் 5,206 ரன்களை எடுத்துள்ளார்.

மற்றொரு தொடக்க வீரர் ரென்ஷா 167 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக உள்ளார், இவருடன் ஹேண்ட்ஸ்கோம்ப் 40 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 365/3 என்று உள்ளது. ரென்ஷா 91 ரன்களில் இருந்த போது ஆமீரின் பவுன்சரில் ஹெல்மெட்டில் அடி வாங்கினார். யாசிர் ஷா ஒரு முறை எல்.பி. தீர்ப்பை பெற ரென்ஷா 137 ரன்களில் இருந்த போது ரிவியூ செய்தார், பந்து மட்டையில் பட்டு கால்காப்பில் பட்டது தெரியவந்தது.

உஸ்மான் கவாஜா (13) தனக்கு விட்ட கேட்ச் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் வஹாப் ரியாஸ் பந்தில் சர்பராஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் ஸ்மித் 24 ரன்களில் யாசிர் ஷா பந்தை கட் செய்ய முயன்று சர்பராஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் அதிகபட்சமாக இதுவரை 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in