இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: நடப்பு சாம்பியன்கள் வெளியேற்றம்

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: நடப்பு சாம்பியன்கள் வெளியேற்றம்
Updated on
1 min read

அமெரிக்காவின் இன்டியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

திங்கள்கிழமை நடைபெற்ற 3-வது சுற்றில் சர்வதேச தரவரிசையில் 31-வது இடத்தில் இருப்பவரான உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோ போலவ் 6-3, 3-6, 7-6 (5) என்ற செட் கணக்கில் நடாலைத் தோற்கடித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை அலெக்சாண்டரும், 2-வது செட்டை நடாலும் கைப்பற்ற, ஆட்டம் 3-வது செட்டுக்கு சென்றது. இதில் ஒரு கட்டத்தில் 3-5 என்ற கணக்கில் பின்னடைவில் இருந்த நடால், பின்னர் அலெக்சாண்டரின் சர்வீஸை முறியடித்து சரிவிலிருந்து மீண்டார். இதனால் இந்த செட் டைபிரேக்கருக்கு சென்றது. அதை அலெக்சாண்டர் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி நடாலைத் தோற்கடித்தார்.

இதற்கு முன்னர் நடாலிடம் 5 முறை தோல்வி கண்ட அலெக்சாண்டர் முதல்முறையாக நடாலை வீழ்த்தியுள்ளார். இன்டியன்வெல்ஸ் போட்டியில் 2006-ல் அரையிறுதிக்கு முன்னேறியதோடு, 2007, 2009, 2013 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்ற நடால், இந்த முறை 3-வது சுற்றோடு வெளியேறியிருக்கிறார்.

வெற்றி குறித்துப் பேசிய அலெக்சாண்டர், “ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி கண்ட பிறகு மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால் இந்த முறை பெற்றிருக்கும் வெற்றி மிகப்பெரியது. முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான நடாலை வீழ்த்தியிருக்கிறேன். இந்த வெற்றியை மறக்க முடியாது. இந்தப் போட்டியின் எஞ்சிய ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்” என்றார்.

நடால் பேசுகையில், “அலெக்சாண்டர் இந்தப் போட்டியில் மட்டுமின்றி, இதற்கு முந்தைய போட்டிகளிலும் எனக்கு எதிராக சிறப்பாக ஆடினார். இந்தப் போட்டியில் எனக்கு பிரேக் வாய்ப்புகள் கிடைத்தபோதிலும், “பேஸ் லைன்” ஷாட்களை சிறப்பாக ஆடாததால் அதை கோட்டைவிட்டேன். நான் நிறைய தவறுகளை செய்தது தோல்விக்கு காரணமாகிவிட்டது” என்றார்.

டோல்கோபோலவ் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை சந்திக்கிறார்.

ஷரபோவா தோல்வி:

மகளிர் பிரிவு 3-வது சுற்றில் நடப்பு சாம்பியனும், சர்வதேச தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான ரஷியாவின் மரியா ஷரபோவா 6-3, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் தகுதிச்சுற்று வீராங்கனையான இத்தாலியின் கேமிலா கியார்கியிடம் தோல்வி கண்டார்.

தரவரிசையில் 79-வது இடத்தில் இருக்கும் இளம் வீராங்கனையான கேமிலா தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் இருக்கும் வீராங்கனை ஒருவரை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். கடந்தஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டிக்குப் பிறகு சர்வதேச தரவரிசையில் 30 இடங்களுக்கு மேல் இருக்கும் ஒரு வீராங்கனையிடம் இப்போதுதான் ஷரபோவா தோற்றிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in