

பிரபல ஃபார்முலா 1 கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கரின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அவர் குறித்த சோக செய்தியை எதிர்கொள்ள அவருடைய ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும் என டாக்டர் கேரி ஹார்ட்ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி வீரரான மைக்கேல் ஷூமாக்கர், கடந்த டிசம்பரில் பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானார். தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து கோமாவில் இருந்து வருகிறார். அவரை கோமாவில் இருந்து எழுப்புவதற்காக மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனினும் இதுவரையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த நிலையில் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் ஷூமாக்கர் பங்கேற்றிருந்த சமயத்தில் தலைமை மருத்துவராக பணிபுரிந்த டாக்டர் கேரி ஹார்ட்ஸ்டெயின், தனது வலைப்பூவில், “மைக்கேல் ஷூமாக்கரை கோமாவில் இருந்து எழுப்புவதற்கான வாய்ப்பு மிக மிக குறைந்து கொண்டே வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.