

கரீபியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் 7-வது ஆட்டத்தில் நேற்று கிறிஸ் கெய்ல் 54 பந்துகளில் 108 ரன்கள் விளாச ஜமைக்கா அணி 192 ரன்கள் வெற்றி இலக்கை எளிதில் எட்டி வெற்றி பெற்றது.
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டிவைன் பிராவோ தலைமை திரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய கிறிஸ் கெய்ல் தலைமை ஜமைக்கா தலவாஸ் அணி கெய்லின் 54 பந்து 108 ரன்களில் 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
திரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணி வலுவான அணியாகும் அந்த அணியில் தொடக்க வீரர்களாக ஆம்லா, மெக்கல்லம் களமிறங்கினர். மெக்கல்லம் 18 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 35 ரன்கள் எடுக்க முதல் 5.3 ஓவர்களில் ஸ்கோர் 49 ரன்களை எட்டியது. ஆம்லா 52 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 74 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து அதிரடி வீரர் கொலின் மன்ரோ 39 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 55 ரன்களை விரைவு கதியில் எடுத்தார். இவர் முந்தைய போட்டியில் சதம் கண்டு வெளிநாட்டு வீரர் ஒருவர் கரீபியன் டி20 லீகில் சதம் கண்ட முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
டேல் ஸ்டெய்ன் அதிகபட்சமாக 4 ஓவர்களில் 56 ரன்கள் வெளுத்து வாங்கப்பட்டார்.
192 ரன்கள் இலக்கைத் துரத்திய போது கெய்ல், சாத்விக் வால்டன் ஜோடி மந்தமாக தொடங்கியது 35 பந்துகளில் 29 ரன்களையே எடுத்தது, கெயில் 17 பந்துகளில் 17 ரன்களையே எடுத்திருந்தார். குமார் சங்கக்காரா இறங்கி 14 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் ஒரு உத்வேகம் கொடுத்தார், ஆனால் அவர் 20 ரன்களில் நரைன் பந்தில் பவுல்டு ஆக கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 121 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால் கெய்ல் வெறியாட்டம் இப்பொது ஆரம்பித்தது. அடுத்த 3 ஓவர்களில் 71 ரன்கள் விளாசப்பட்டது. இதில் 13-வது ஓவரை இடது கை ஸ்பின்னர் சுலைமான் பென் வீச கெய்ல் 4 சிக்சர்களை அடித்து அந்த ஓவரில் 30 ரன்கள் வந்தது. முன்னதாக 11-வது ஓவரில் கெய்ல் 1 பவுண்டரி 2 சிக்சர்களையும், 12-வது ஓவரில் 2 சிக்சர்கள் 1 பவுண்டரியையும் விளாசித் தள்ளினார்.
ஆந்த்ரே ரசல் (18 பந்துகளில் 24) கிறிஸ் கெய்ல் ஜோடி 107 ரன்களை 3வது விக்கெட்டுக்காக 7.2 ஓவர்களில் சேர்த்தனர். இதில் கெய்ல் அதிரடிப் பங்களிப்பே அதிகம். கடைசியில் கெய்ல் 54 பந்துகளில் 6 பவுண்டரி 11 சிக்சர்களுடன் 108 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இடையே 14 வது ஓவரில் சுனில் நரைன் 2 ரன்களையும், 15-வது ஓவரில் டிவைன் பிராவோ 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினர். கடைசி 5 ஓவர்களில் 42 ரன்கள் தேவை என்ற நிலையில் 16-வது ஓவரில் ரசல் ஒரு பவுண்டரி ஒரு சிக்சரையும் கெய்ல் ஒரு சிக்சரையும் அடிக்க 19 ரன்கள் வந்தது. பிறகு சமன்பாடு 12 பந்துகளில் 10 என்றவாறு ஆக 19வது ஓவரில் பொவெல் ஒரு பவுண்டரி 1 சிக்சர் அடித்து வெற்றி பெறச் செய்தார்.
சுனில் நரைன் உண்மையில் ஆட்ட நாயகன் விருது பெற வேண்டியவர், இந்த அதிரடியிலும் 4 ஓவர்களில் 9 ரன்களையே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.