

ஓவலில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி 50 ஒவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்களைக் குவித்துள்ளது.
ஷிகர் தவண் மிக நிதானமாகத் தொடங்கி பிறகு அதிரடி ஆட்டம் ஆடி 128 பந்துகளில் 15 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 125 ரன்கள் எடுக்க, ரோஹித் சர்மா 79 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 78 ரன்களையும் பினிஷர் தோனி அபாரமாக விளையாடி 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 52 பந்துகளில் 63 ரன்களையும், கடைசியில் கேதார் ஜாதவ் 13 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 25 ரன்களையும் எடுக்க இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்களை எடுத்துள்ளது.
கோலியின் அரிதான டக் அவுட்டுக்குப் பிறகு, யுவராஜ் சிங்கின் ஏமாற்றத்துக்குப் பிறகும் தவண், தோனி ஜோடி சுமார் 11 ஓவர்களில் 82 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க ஆட்டம் சூடுபிடித்தது. ஆனால் இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது, ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஜோடி தொடக்கத்தில் 24.5 ஓவர்களில் 138 ரன்களைச் சேர்த்ததே.
ஒரேயொரு கேள்வி எஞ்சுகிறது என்னவெனில் இலங்கையில் வேகப்பந்து வீச்சாளர் குணரத்னே 3 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து யுவராஜ் விக்கெட்டைக் கைப்பற்றினார், ஆனால் அவருக்கு ஏன் ஓவர்களை தொடர்ந்து அளிக்கவில்லை என்பது தெரியவில்லை.
கடைசி ஓவரின் 2-வது பந்தில் தோனி லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறிய பிறகு கேதார் ஜாதவ் பெரேரா ஓவரில் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்சரையும் மிட்விக்கெட் மற்றும் ஸ்கொயர் லெக் திசையில் 2 பவுண்டரிகளையும் அடித்தார். கடைசி ஓவரில் 15 ரன்கள் வந்தது.
இலங்கை தரப்பில் மலிங்கா 10 ஒவர்களில் 70 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் லக்மல் 72 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் நுவான் பிரதீப் 10 ஓவர்களில் 73 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் பெரேரா 9 ஓவர்களில் 54 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்ற, குணதிலக 8 ஓவர்களில் 41 ரன்களுக்கு விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.
ஷிகர் தவண், ரோஹித் சர்மா தொடக்கத்தில் ஒரு கட்டுக்கோப்பான இலங்கைப் பந்து வீச்சை எச்சரிக்கையுடன் அணுகினர். ஓரிரு அரை வாய்ப்புகள் கொடுத்தனர். தவணுக்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பும் நழுவ விடப்பட்டது. அதாவது நேர் த்ரோ சில இஞ்ச்களில் ஸ்டம்பைத் தவறவிட்டது. அதே போல் ரோஹித் சர்மா 50 ரன்களை எடுக்க அடித்த ஷாட் பவுண்டரியில் ஏறக்குறைய கேட்ச் ஆகியிருக்கும் ஆனால் சிக்ஸ் ஆனது. மற்றபடி இவர்களை இலங்கைப் பந்து வீச்சு அதிகம் தொந்தரவு செய்யவில்லை.
தவண் பாயிண்டில் கட் அடித்து பவுண்டரி அடித்ததோடு கவர் திசையில் சில அதிரடி ஷாட்களை ஆடினார். ரோஹித் சர்மா ஹூக் ஷாட்டில் 2 சிக்சர்களை அடித்தார், அதில் ஒன்றுதான் கேட்ச் ஆவது போல் சென்று சிக்ஸ் ஆனது. கடைசியில் மலிங்கா பந்தை டாப் எட்ஜில் சிக்ஸ் அடித்த ரோஹித் அடுத்த ஷாட்டை தன்னுணர்வுடன் மட்டையில் நன்றாக வாங்க வேண்டும் என்று ஆடினார் அது நேராக பீல்டர் கையில் தஞ்சமடைந்தது, அவர் தூக்கி அடிக்க முனைந்திருந்தால் அதுவும் டாப் எட்ஜ் ஆகி பீல்டர் இல்லாத திசைக்குச் சென்றிருக்கும் ஆனால் அவர் மிகவும் தன்னுணர்வுடன் அதை தரையில் ஆட வேண்டும் என்று நடுமட்டையில் ஆடினார், துல்லியமான கனெக்ஷன் கேட்ச் ஆக முடிந்தது கிரிக்கெட் ஆட்டத்தின் நகைமுரண்.
ஷிகர் தவண், முதலில் ரோஹித் அடிக்கட்டும் என்று காத்திருந்தார் அப்போது வரை 69 பந்துகளில் அரைசதம் எடுத்த அவர், பிறகு 15 பந்துகளில் 27 ரன்களை விளாசினார். 40வது ஓவரில் அவரது ஃபேவரிட் ஷாட் கட் மூலம் சதம் கண்டார் தவண், ஐசிசி தொடர்களில் தவண் 15 இன்னிங்ஸ்களில் அடிக்கும் 5-வது சதமாகும் இது. ஒருநாள் போட்டிகளில் தவணின் 10-வதும், இலங்கைக்கு எதிரான 2-வது சதமுமாகும். தவண் தனது கடைசி 19 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார்.
தோனி 34வது ஓவரில் களமிறங்கி, முதல் ஸ்கோரிங் ஷாட்டை தேர்ட் மேன் மூலம் அப்பர் கட் செய்து சிக்சர் விளாசினார். 14 பந்துகளில் 6 பவுண்டரிகளை தோனி அடித்தார். இலங்கை பவுலர்களும் புல்டாஸ்களாக வீசினர், ஆனால் இவை தாழ்வான புல்டாஸ்கள் ஒவ்வொரு முறையும் இதைப் பவுண்டரிக்கு அனுப்புவது கடினம், ஆனால் தோனி ஒரு புல்டாஸ் சற்றே வயிறு உயரத்துக்கு வர அதனை முறையாக மிட்விக்கெட் ரசிகர்கள் மத்தியில் சிக்சருக்கு தூக்கினார்.
யுவராஜ், ஹர்திக் பாண்டியா இம்முறை சோபிக்கவில்லி, கோலி ஒரு அரிதான டக் அவுட் ஆனார். மற்றபடி இந்திய அணியின் பவர் பேட்டிங் இன்னொரு முறை அரங்கேறியது என்றே கூற வேண்டும்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 34 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தாலும் விராட் கோலி டக் அவுட் ஆனது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக...
கோலியை பொறி வைத்து வீழ்த்திய நுவான் பிரதீப்
டாஸ் வென்ற இலங்கை முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைக்க ரோஹித் சர்மா (78 ரன்கள், 79 பந்துகள், 6 நான்குகள் 3 ஆறுகள்), ஷிகர் தவண் ஜோடி சுமார் 25 ஓவர்களில் 138 ரன்கள் என்ற அபாரத் தொடக்கத்தைக் கொடுத்தனர்.
ரோஹித் சர்மா இலங்கைக்கு அபாயகரமான முறையில் ஆடிக் கொண்டிருந்தார், மலிங்கா வீசிய பந்தை ஹூக் ஷாட்டில் டாப் எட்ஜில் சிக்ஸ் அடித்த ரோஹித் சர்மா அடுத்த அதேமாதிரியான பந்தை மிகச்சரியாக கனெக்ட் செய்ய வேண்டும் என்று தன்னுணர்வுடன் ஆடினார், ஆனால் அது நேராக லெக் திசையில் டீப்பில் பெரேரா கையில் எளிதான கேட்ச் ஆக முடிந்தது.
அதன் பிறகு பலத்த ஆரவாரத்துடன் விராட் கோலி களமிறங்கினார்.
மலிங்கா வீசிய முதல் பந்தை ஆடாமல் விட்டார். 26-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் வீச வந்தார், திட்டமிட்டபடி ஷிகர் தவணுக்கு லெக் திசையில் ஒரு ரன் கொடுக்கப்பட்டு விராட் கோலி பேட்டிங் முனைக்கு வந்தார்.
ஸ்லிப், கவர், ஷார்ட் எக்ஸ்ட்ரா கவர், மிட் ஆஃப் என்று ஆஃப் திசை வலுவாக்கப்பட்டது. இந்நிலையில் ஒருஆஃப் ஸ்டம்ப் பந்தை கோலி முன்னால் வந்து தடுத்தாடினார். லேசாக பொறியில் சிக்குவது போல் தெரிந்தது.
ஆனால் இன்னொரு அதே போன்ற ஆஃப் ஸ்டம்ப், அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்ப் லைன் மிகவும் அற்புதமான பந்து வீச்சை வீசினார் நுவான் பிரதீப் கோலியின் ஈகோ தூண்டப்பட பந்து மேலே வரும்போதே டிரைவ் ஆட முயன்றார் மட்டையின் உள்விளிம்பில் பட்டு சரியாகச் சிக்காமல் போனது. ஷாட்டை சற்றே முன் கூட்டியே ஆடினார்.
அடுத்த பந்து எதிர்பார்த்தது நடந்தது, அருமையான ஆஃப் ஸ்டம்ப் லைன், பந்து வெகு லேசாக எதிர்பார்ப்பை விட உயர்ந்தது, கோலி மட்டையை நீட்டினார் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் டிக்கிவெல்லாவுக்கு எளிதான கேட்ச் ஆனது. ஆஞ்சேலோ மேத்யூஸ் மிக அருமையாக கேப்டன்சி செய்தார். வலது காலை முதலில் பின்னால் சற்றே குறுக்காக நகர்த்துவதாக அமையும் தொடக்க கால் நகர்த்தலில் இந்தப் பந்தை அவர் ஒருவேளை ஆடாமலே கூட விட்டிருக்கலாம், அல்லது சரியாக தடுத்தாடியிருக்கலாம். ஆனால் கோலியின் கால் நகர்த்தல் முன்னங்காலை நீட்டும் வகையறாவைச் சேர்ந்தது, அல்லது காலை நகர்த்தாமல் மட்டையை நீட்டும் பழக்கம் கொண்டது.
இங்கிலாந்து பிட்ச்களில் நல்ல ஆஃப் ஸ்டம்ப் லைன் பந்துவீச்சுக்கு எதிராக விராட் கோலியின் பலவீனத்தை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் நுவான் பிரதீப்.