கெர்ரியை நாக் அவுட் செய்வேன்: விஜேந்தர் சிங் நம்பிக்கை

கெர்ரியை நாக் அவுட் செய்வேன்: விஜேந்தர் சிங் நம்பிக்கை
Updated on
1 min read

ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் பட்டத்துக்கான தொழில்முறை குத்துச்சண்டை போட்டி வரும் ஜூலை 16-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் விஜேந்தர் சிங், முன்னாள் ஐரோப்பிய சாம்பியனும் அனுபவ குத்துச்சண்டை வீரருமான ஆஸ்திரேலியாவை சேர்ந்த கெர்ரி ஹோப்புடன் மோதுகிறார்.

தொழில்முறை குத்துச்சண்டை யில் களமிறங்கிய பிறகு தொடர்ச்சியாக 6 நாக்-அவுட் வெற்றிகளைக் குவித்துள்ளார் விஜேந்தர் சிங். இதனால் கெர்ரியுடன் அவர் மோத உள்ள ஆசிய பசிபிக் சாம்பியன் பட்டத்துக்கான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டிக்கு மான்செஸ்டர் நகரில் விஜேந்தர் சிங் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டி தொடர்பாக விஜேந்தர் சிங் கூறியதாவது:

எனது முதல் பட்டத்துக்கான போட்டிக்கு இன்னும் 3 வார காலமே உள்ளது. சொந்த நாட்டு மக்கள் முன்னிலையில் இந்த போட்டியை எதிர்கொள்ள இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை.

10 சுற்றுகள் கொண்ட ஆசிய பசிபிக் பட்டத்துக்கான போட்டியில் வெற்றி பெறுவதற்காக இருவாரங்களுக்கு முன்பே தீவிர பயிற்சியை தொடங்கி விட்டேன். கெர்ரி மோதிய போட்டிகளின் வீடியோவை பார்த்துள்ளேன்.

அவர் சிறந்த போட்டியாளர். அவருக்கு எதிராக தயாராக இருக்கும் வகையில் கடின பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். ஒவ்வொரு போட்டிக்கும் நான் செல்லும்போது நிச்சயம் வெல்வேன் என்ற நம்பிக்கையுடன் தான் செல்வேன். என்னை எதிர்த்து சண்டையிடுபவருக்கு சந்தேகம் வரும். கெர்ரி என்னை விட வலிமையானவர் இல்லை என நான் நம்புகிறேன்.

மேலும் நான் பயிற்சி பெறுவது போன்று அவர் பயிற்சி பெறுவதில்லை.

எனக்கு எதிராக கெர்ரி கூறிய கருத்துக்களை நானும் படித்தேன். ஆனால் அதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை. ஜூலை 16-ம் தேதி எனது குத்துகள், அதீத நம்பிக்கை கொண்ட கெர்ரிக்கு பதில் கூறும். அவரை நாக் அவுட் செய்ய காத்திருக்கிறேன். இந்த போட்டியில் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

கெர்ரி அனுபவம் உள்ளவர் தான். ஆனால் வெற்றி என்பது சண்டையின்போது வளையத்துக்குள் கொடுக்கும் குத்துகள் மற்றும் வலிமையை பொறுத்துதான் அமையும். ஆசிய பசிபிக் பட்டம் என்னுடையது. நான் நிச்சயமாக அனைவருக்கும் பெருமை சேர்ப்பேன்.

இவ்வாறு விஜேந்தர் சிங் கூறினார்.

கெர்ரி ஹோப் இதுவரை 30 போட்டிகளில் விளையாடி 23 வெற்றிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in