உலக குத்துச்சண்டை: 2-வது சுற்றில் விகாஸ் மாலிக்

உலக குத்துச்சண்டை: 2-வது சுற்றில் விகாஸ் மாலிக்
Updated on
1 min read

கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் மாலிக் (60 கிலோ எடைப் பிரிவு) 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் நடப்பு தேசிய சாம்பியனான விகாஸ் மாலிக் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் கிர்கிஸ்தானின் மெடர் மமாகீவைத் தோற்கடித்தார். மாலிக் தனது 2-வது சுற்றில் போலந்தின் போல் டேவிட் மிச்செலஸை சந்திக்கிறார். இந்தச் சுற்று வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. மிச்செலஸ் தரவரிசை அடிப்படையில் நேரடியாக 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இன்றைய போட்டி

புதன்கிழமை நடைபெறும் போட்டியில் இந்திய வீரர் மன்தீப் ஜங்ரா (69 கிலோ எடைப் பிரிவு), தனது முதல் சுற்றில் தான்சானியாவின் செலிமானி கிதுண்டாவை சந்திக்கிறார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறியவரான மன்தீப் ஜங்ரா, முதல்முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறார். இந்த ஆண்டு சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ள மன்தீப் ஜங்ரா, உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

100 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் 450 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா இதுவரை இரு வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. 2009-ல் விஜேந்தர் சிங்கும் (75 கிலோ), 2011-ல் விகாஸ் கிரிஷணும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். விஜேந்தர் சிங், இப்போது 4-வது முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in